ஆண் குழந்தை பிறக்க பாகிஸ்தான் கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த ஹீலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் வந்தார். அவர் தனது தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரினார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தலையில் ஆணி எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது அவர், “நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்தப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கேட்டுக் கொண்டேன். அவரோ, எனது தலையில் 5 செமீ அளவிலான ஆணிகள் ஐந்தை அடித்து அனுப்பினார். ஆனால் எனக்கு அதனால் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. எனவே அதை அகற்ற வேண்டும்” என்றார்.
“அந்த ஆணிகள் மூளையில் தொடவில்லை. ஆணி அறையப்பட்டதால் மிகுந்த வலியில் இருந்த பெண் முதலில் தானே ஆணியை அறைந்து கொண்டதாகக் கூறினார். பின்னர் தான் அவர் தலையில் ஆணியை அந்த ஹீலர் அறைந்தது தெரியவந்தது” என்று மருத்துவர்கள் கூறினர்.
மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் தலையில் இருந்து ஆணியை அப்புறப்படுத்தி அனுப்பினர். இது குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனை சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு அந்தப் பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். அவரை விசாரித்து அந்த ஹீலரை கைது செய்யப்போவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.