இந்தியாவின் ஒரே ஆஸ்கர் நம்பிக்கை
94வது ஆஸ்கர் விருதுகளுக்காக கடைசியாக தேர்வான படங்கள், கலைஞர்களின் நாமினேஷன் பட்டியல் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்த் திரைப்படமான 'ஜெய் பீம்' படம் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பட்டியலில் இடம் பெறும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், இறுதிப் பட்டியலில் அந்தப் படம் இடம் பெறவில்லை.
இருப்பினும் இந்தியப் படங்களுக்கான ஆஸ்கர் கனவு இன்னுமொரு நம்பிக்கையில் இருக்கிறது. சிறந்த டாக்குமென்டரிப் படங்களுக்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட 'ரைட்டிங் வித் பயர்' என்ற படம் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது.
|
டில்லியைச் சேர்ந்த ரின்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் உருவாக்கியுள்ள இந்தப் படம் மொத்தமாகக் கலந்து கொண்ட 138 படங்களிலிருந்து ஷார்ட் லிஸ்ட் ஆன 15 படங்களிலும் தேர்வாகி கடைசியாக இறுதிப் போட்டியில் 5 படங்களில் ஒன்றாகப் போட்டியிடுகிறது.
“இந்திய டாகுமென்டரி படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆவது இதுவே முதல் முறை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்திய சினிமாவுக்கே இது ஒரு முக்கியமான தருணம். தலித் பெண் பத்திரிகையாளர்களைப் பற்றிய படம் இது. வலிமை என்றால் என்ன என்பதையும், இந்தக் கால இந்தியப் பெண்களைப் பற்றிய படமாகவும் இந்தப் படம் உருவாகியுள்ளது” என படத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான சுஷ்மித் கோஷ் தெரிவித்துள்ளார்.