ட்ரூகாலர் செயலியை இந்தியாவில் தினமும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15 கோடி என்றும், மாதந்தோறும் கிட்டத்தட்ட 18.5 கோடி பேர் பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள ட்ரூகாலர் நிறுவனம் பெங்களூரு, கூர்கான், மும்பை மற்றும் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி உள்ளிட்ட நகரங்களில் கிளை அலுவலகங்கள் வைத்துள்ளது. மொபைலில் வரும் அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ட்ரூகாலர் செயலி உதவுகிறது. மோசடி செய்திகள், அழைப்புகளைக் கண்டறிய ட்ரூகாலர் துணை நிற்கிறது.
ஸ்வீடன் நிறுவனமான ட்ரூகாலரின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆலன் மமேடி பேசுகையில், “தொழில்நுட்பம் மூலமான தொடர்பு அனைவருக்கும் இடையே சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் ட்ரூகாலர் செயலி. கடந்த வருடங்களில் செயலியின் அபார வளர்ச்சிக்கு இந்த நோக்கத்தின் தீவிரமே காரணம். முதலில் அழைப்பவர் யார் என்று அறிய மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவை தற்போது குறுஞ்செய்திகளை முடக்குவது, டிஜிட்டல் முறையில் கடன் பெறுவது எனப் பல விஷயங்களைப் பயனர்களுக்குத் தருகிறது” என்றார்.
இந்தியாவில் இந்தச் செயலியைத் தினமும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 18.5 கோடி என்றும், ஒரு மாதத்துக்கு 15 கோடி பேர் இதைப் பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் தினமும் 20 கோடி பேரும், மாதம் 25 கோடி பேரும் ட்ரூகாலரைப் பயன்படுத்துகின்றனர்,
இந்த வருடம் மட்டும் ட்ரூகாலரைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 4 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.