இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் என்னும் வசதியில் புதிய ஆடியோ அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்குப் பயனர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
டிக் டாக் செயலிக்குப் போட்டியாக ஃபேஸ்புக் தரப்பு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்கிற சமூக வலைதளத்தை அறிமுகம் செய்தது. டிக் டாக் போலவே குறு காணொலிப் பதிவுகளுக்கான தளம் இது. ஆரம்பத்தில் 15 விநாடிகளாக இருந்த காணொலி அளவு, பின்பு 30 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டது. அதேபோல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸுக்கு எனத் தனிப் பொத்தானும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் ரீல்ஸில் புதிய ஆடியோ அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் பல்வேறு சினிமா பாடல்கள், பிரபல வசனங்கள் உள்ளிட்ட ஆடியோ வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆடியோ கிளிப்புகளைப் பயனர்கள் சேமித்து வைத்துக் கொள்ளலாம். நேரடிக் குறுஞ்செய்தியாகப் பிற பயனர்களுக்கும் அனுப்பலாம். இணையத்திலும் தேடி எடுத்துக் கொள்ளலாம். பிடித்த ஆடியோ க்ளிப்புகளை புக்மார்க் செய்து வைத்துக்கொண்டு, பின்னரும் பயன்படுத்தலாம்.
இதை இன்ஸ்டாகிராமின் சேமிக்கப்பட்ட பதிவுகள் (saved posts) பகுதியில் உள்ள ஆடியோ கோப்பில் மீண்டும் எடுத்துக் கொள்ளலாம். ரீல்ஸின் புதிய அம்சங்களுக்குப் பயனர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.