லண்டன்,
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் அமெரிக்கா, நேட்டோ படைகள் உக்ரைனுக்கும் ஆதரவளிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால், ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி லீஸ் டுரூஸ் இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போர் பதற்றத்தை தணிக்க ரஷிய அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி ரஷியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.