உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்: கனேடியர்களுக்கு அரசு எச்சரிக்கை



உக்ரைன் நாட்டிலிருக்கும் கனேடியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய இராணுவம் ஊடுருவும் வாய்ப்பு உள்ளதால், முடிந்தவரையில் சீக்கிரமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு தனது மக்களை கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

உக்ரைன் நாட்டில் உள்ள நமது தூதரகத்தின் தூதரக உதவிகளை செய்யும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என, உக்ரைனில் வாழும், பதிவு செய்துகொண்டுள்ள 780 கனேடியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ள கனேடிய அரசு, நீங்கள் உக்ரைனிலிருந்து வெளியேற கனடா அரசின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்தின் ஊடுருவல், போக்குவரத்து வழிகள் மற்றும் சேவைகளை நாடு முழுவதும் பாதிக்கலாம். விமான சேவை பாதிக்கப்படலாம் அல்லது திடீரென ரத்து செய்யப்படலாம் என்று கூறியுள்ள கனடா, மின்சாரம், தண்ணீர், உணவு மற்றும் தகவல் தொடர்பும் பாதிக்கப்படலாம் என்றும், அவசர உதவிகள் மற்றும் மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

உக்ரைனில் தங்க முடிவு செய்துள்ள கனேடியர்கள், தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு திட்டங்களை மீளாய்வு செய்துகொள்ளுமாறும், தேவையானால் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்க ஆயத்தமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதத்தின் நடுவிலிருந்தே அத்தியாவசிய காரணங்கள் தவிர்த்து பிற காரணங்களுக்காக உக்ரைனுக்கு பயணிப்பதற்கு எதிராக தன் மக்களுக்கு கனடா ஆலோசனை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.