உத்தரப் பிரதேசத்தில் நாளை முதல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பிரச்சாரத்தை முடித்துவிட்டனர். இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளான இன்று கட்சி தாவியுள்ளார் வேட்பாளர் ஒருவர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சர்தாவால் தொகுதியில்
ஆம் ஆத்மி
கட்சி வேட்பாளராக யவர் ரோஷன் அறிவிக்கப்பட்டார். நாளை தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் யவர் ரோஷன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி
சமாஜ்வாதி
கட்சியில் இணைந்துள்ளார்.
இது ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலர் வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் ஆம் ஆத்மி வேட்பாளர் சமாஜ்வாதிக்கு தாவியுள்ளார்.
சர்தாவால் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும் பங்கஜ் மாலிக் என்ற வேட்பாளருக்கு தான் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ள யவர் ரோஷன், ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, யவர் ரோஷன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களை சேர்ந்த 58 சட்டமன்ற தொகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது.