மத்திய சுகாதார அமைச்சகத்தின் கேன்டீனில் இனிமேல்
சமோசா
விற்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய மக்களின் தேசிய உணவுப் பதார்த்தங்களில் சமோசாவுக்கும் முக்கிய இடம் உண்டு. சமோசா என்றதுமே வாய் திறந்து ஜொள்ளு வடிய ஒரு கடி கடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது.. அந்த அளவுக்கு சமோசாவுக்கு மக்கள் மனதில் தனி இடம் உண்டு.
மாலை ஆகி விட்டாலே போதும் சமோசா ஒரு கையும்.. சூடான டீ இன்னொரு கையுமாக இருப்போரை அதிகம் பார்க்க முடியும். சூடான வடைக்கு சமமான இன்னொரு சுவையான பதார்த்தம் என்றால் அது சமோசாதான்.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சமோசாவை சுகாதாரத்துறை தனது கேன்டீனில் தடை செய்துள்ளது. இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர்
மன்சுக் மாண்டவ்யா
. அமைச்சர் மாண்டவ்யா உடல் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்பவர். நாடாளுமன்றத்துக்கு அவ்வப்போது சைக்கிளில் வருவதையும் வழக்கமாக கொண்டிருப்பவர். தினசரி யோகா செய்யக் கூடியவர். சைக்கிளில் தினசரி 20 கிலோமீட்டர் சவாரி செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் தனது அமைச்சகத்தின் கேன்டீனில் சில மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளார். சமோசா, பிரெட் பக்கோடா போன்ற ஃபிரைட் ஐட்டங்களை இனிமேல் விற்க வேண்டாம் என்று மாண்டவ்யா உத்தரவிட்டுள்ளார். இவையெல்லாம் உடம்புக்கு நல்லதில்லை என்பதால் அவற்றை தடை செய்துள்ளாராம் அமைச்சர்.
இதற்குப் பதில் தால் சில்லாஸ், சிறு தானிய ரொட்டிகள், சிறு தானிய புலாவ் ஆகியவை உணவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை சோதனை ரீதியாக தற்போது அறிமுகம் செய்துள்ளனர். மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இவை நீட்டிக்கப்படும் அல்லது நீக்கப்படும்.
தால் சில்லாஸ் 10 ரூபாய்க்குக் கிடைக்கும். பிரேக்பாஸ்ட் உணவு ரூ. 25க்கும், மதிய உணவு ரூ. 40க்கும் இந்த கேன்டீனில் கிடைக்கும்.