நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.
வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில், தற்போது வேட்பாளர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த பூபாலன் (42வயது) மனைவி தனலட்சுமி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட களம் இறங்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஸ்ரீபெரும்புதூர் நகர எஸ்.சி. எஸ்.டி. துணைத்தலைவராக இருந்த பூபாலன், காங்கிரஸ் சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், தனது மனைவியை சுயேச்சையாக போட்டியிட களம் இறக்கியுள்ளார்.
இந்நிலையில், பூபாலன் தனது மனைவி தனலட்சுமிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கத்தியை காட்டி பொதுமக்களிடம் மிரட்டி உள்ளார். அந்நேரம் ரோந்து பணியில் வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பூபாலன் அராஜகம் செய்து கொண்டு இருப்பதை கண்டு, உடனடியாக அவரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.