திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையம் அருகே 216 அடி உயரத்தில் ராமானுஜர் சிலை நிறுவப்பட்டது. இதனை கடந்த சனிக்கிழமை பிரமதர் மோடி திறந்து வைத்தார்.
ராமானுஜர் சிலை வெள்ளி செம்பு தங்கம் துத்தநாகம் டைட்டானியம் உள்ளிட்டவை கொண்டு பஞ்ச உலோகத்தில் ரூ.135 கோடி செலவில் 216 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை இந்தியாவில் 2-வது உயரமான சிலை ஆகும். ராமானுஜர் சிலை அமைக்கப்பட்ட இடம் 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சிலையை சுற்றிலும் 108 திவ்ய திருத்தலங்களில் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராமானுஜர் சிலையை ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர் நடிகைகள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் அந்த இடம் பெரிய சுற்றுலா தளம்போல் காட்சியளிக்கிறது. அங்கு வருகின்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ராமானுஜர் சிலையை பார்வையிட்டு தரிசனம் செய்தார். அவருடன் ஆந்திர மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.