ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறி, சீனாவைச் சேர்ந்த டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறும்போது, ”வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ளும் செயலியான டிக்டாக் மீது சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடம் இருந்து புகார் வந்தது. வீடியோக்களில் ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கம் இருப்பதாகப் புகார் கூறப்படுகிறது. இதனால் டிக்டாக் செயலிக்குப் பாகிஸ்தானில் தடை விதிக்கப்படுகிறது.
முறையற்ற உள்ளடக்கங்களை டிக்டாக் சரிசெய்து கொள்ளும் விதத்தில் திருப்தி ஏற்படுமானால், தடையை விலக்கிக் கொள்வது குறித்து ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிக்டாக் நிறுவனம் கூறும்போது, ”பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உள்ளோம். பாகிஸ்தான் சந்தையில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு டிக்-டாக்கில் இடம்பெறும் தகவல்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, சீன நிறுவன செயலியான டிக்-டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் தடை விதித்தது.
இந்திய அரசின் முடிவால் டிக்-டாக், ஹலோ செயலி ஆகியற்றின் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ்-க்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.