செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8, 2022) உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 தொற்றின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டிய நிலையில், உலக சுகாதார அமைப்பு, ஓமிக்ரானின் துணை வகையான பிஏ.2 (BA.2) உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது.
தற்போது ஆதிக்கம் செலுத்தும் பிஏ.1 பதிப்பை விட பிஏ.2 துணை மாறுபாடு மிகவும் பொதுவானதாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பின் கோவிட்-19 தொழில்நுட்ப முன்னணியின் மரியா வான் கெர்கோவ் கூறினார்.
“பிஏ.2 ஆனது பிஏ.1 ஐ விட அதிகமாக பரவக்கூடியது. எனவே உலகம் முழுவதும் பிஏ.2 பரவும், மக்களிடம் கண்டறியப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று உலக சுகாதார அமைப்பின் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட கேள்வி பதில் அமர்வின் போது வான் கெர்கோவ் கூறினார்.
இருப்பினும், அசல் ஓமிக்ரான் விகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே இது மறுதொற்றை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பிஏ.2 துணை வகையை உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது
உலக சுகாதார அமைப்பு பிஏ.2 ஐக் கண்காணித்து வருகிறது. ஒமிக்ரான் தொற்றில் விரைவான அதிகரிப்பு மற்றும் கூர்மையான சரிவைக் கண்ட நாடுகளில் இந்த துணை மாறுபாடு புதிய தொற்றுநோய்களை ஏற்படுத்துகிறதா என்பதை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
மேலும் படிக்க | ஓமிக்ரான் எலியிலிருந்து வந்ததா? சீன விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில் பகீர் தகவல்கள்
இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், துணை மாறுபாட்டால் ஏற்படும் நோய்த்தொற்றுகளின் தீவிரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்று அவர் கூறினார்.
கோவிட்-19 தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அனைத்து நோய்த்தொற்றுகளையும் தடுக்கவில்லை என்றாலும், கடுமையான நோய் மற்றும் மரணத்தைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வான் கெர்கோவ் கூறினார். தடுப்பூசி போடவும், இண்டோர் பொது இடங்களில் முகக்கவசங்களை அணியவும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.
உலகளவில் 40 கோடிக்கும் அதிகமானோர் கோவிட்-19 ஆல் பாதிப்பு, 57 லட்சம் இறப்புகள்
இதற்கிடையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, உலகளாவிய கோவிட் -19 தொற்று எண்ணிக்கை 40,02,44,031 ஆகவும், உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 57,61,208 ஆகவும் உள்ளது. 7.7 கோடிக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் மற்றும் 9.08 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளுடன் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக உள்ளது. தற்போது உலகளவில் 19 சதவீத கொரோனா வைரஸ் தொற்று மற்றும் 15 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளும் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது.
4.2 கோடிக்கும் அதிகமான நோய்த்தொற்றுகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசில் 2.6 கோடி என்ற எண்ணிக்கையுடன் அடுத்த இடத்தில் உள்ளது.
உலகளாவிய கேசலோட் ஜனவரி 26, 2021 அன்று 10 கோடி என்ற மோசமான மைல்கல்லைத் தொட்டது. ஆகஸ்ட் 4, 2021 அன்று 20 கோடியாக உயர்ந்த இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி 30 கோடியைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஓமிக்ரான் அறிகுறிகள்: தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களில் வேறுபடுமா?