கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் நீக்கப்படும் என்று யூடியூப் அறிவித்துள்ளது.
பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகளை வழங்கும் வீடியோக்கள் இனி இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யூடியூப் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ”உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அல்லது உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுக்கு எதிராக இருக்கும் அல்லது தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் தடை செய்யப்படும்.
அதேபோல கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் நீக்கப்படும். பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகளை வழங்கும் வீடியோக்கள் இனி இருக்காது.
‘தடுப்பூசிகள் மக்களைக் கொல்லும். குழந்தையின்மையை ஏற்படுத்தும். அதில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும்’ என்பன போன்ற தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் நீக்கப்படும். எனினும் தடுப்பூசி குறித்த எதிர்பார்ப்புகளையும் கவலைகளையும் உள்ளடக்கிய உரைகளைக் கொண்ட வீடியோக்கள் தளத்தில் அப்படியே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிப்ரவரி மாதத்தில் இருந்து, கரோனா நோய் மற்றும் தொற்றுப் பரவல் குறித்த அபாயகரமான மற்றும் தவறான தகவலை அளித்த சுமார் 2 லட்சம் வீடியோக்களை யூடியூப் நீக்கியது குறிப்பிடத்தக்கது.