புதுடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஹூண்டாய் கார் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் தென் கொரிய அரசும் வருத்தம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதி ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாகிஸ்தானில் உள்ள தென் கொரியாவை சேர்ந்த பிரபல ஹூண்டாய் கார் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அவர்களின் சுதந்திர போராட்டத்தில் ஆதரவாக இருப்போம்’ என பதிவிட்டது. இதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் கிளம்பியது.இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்வது 2வது பெரிய நிறுவனம் ஹூண்டாய். இங்கு ஏராளமான முதலீடுகளை செய்துள்ள நிலையில், ஹூண்டாய் கார்களை புறக்கணிக்க வேண்டுமென டிவிட்டரில் மக்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். நேற்று முன்தினம் ஹூண்டாய் புறக்கணிப்பு ஹேஷ்டேக் இந்தியாவில் டிரண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஹூண்டாய் நிறுவனம் பிரச்னையை தீர்க்க பணிந்து வந்தது.சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளதாகவும், இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் விளக்கம் அளித்தது. அதே சமயம் அரசியல் அல்லது மத விவகாரங்களில் கருத்து தெரிவிக்கவில்லை என்றும், இந்திய மக்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாகவும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள தென் கொரியா தூதருக்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘இந்த விவகாரம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றியது. இதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் தென் கொரிய தூதரிடம் இந்திய அரசின் கடுமையான அதிருப்தியும், இச்செயலுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள இந்திய தூதர், சம்மந்தப்பட்ட கார் நிறுவனத்தின் தலைமையகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளார். அதே போல, தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சுங் ஈய்- யோங், தொலைபேசி மூலம் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசி வருத்தம் தெரிவித்துள்ளார்,’’ என்றார்.வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை இந்தியா வரவேற்கும் அதே வேளையில், இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு விஷயங்களில் தவறான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.மன்னிப்பு போதாதுஇந்த விவகாரம் மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்டது. அப்போது பேசிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், ‘‘ஹூண்டாய் விவகாரம் அந்நாட்டு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹூண்டாய் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இப்பிரச்னையில் அவர்கள் தெளிவான மன்னிப்பு கோருவதில் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என இந்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது,’’ என்றார்.