பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள இந்து கோவில்களை மட்டுமே தமிழக அரசு இடித்து வருகிறது என்ற குற்றச்சாட்டிற்கு உரிய ஆதாரங்களுடன் விரிவான மனுவை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி தாக்கல் செய்துள்ள மனுவில், 47 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவிலான நீர்நிலைகள் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இவ்வளவு ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், மாநிலம் முழுவதும் அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள 200 இந்து கோவில்களை மட்டும் தமிழக அரசு திட்டமிட்டு இடித்து வருகிறது. அவ்வாறு இடித்து தள்ளப்படும் கோவில்களில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களும் உள்ளன. நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள இந்து கோவில்களை மட்டுமல்லாமல், பிற மத வழிபாட்டு தலங்களையும் இடித்தகற்றும் முன்பாக அவற்றை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவோ அல்லது அந்த இடத்தை முறைபடுத்தி மறுவரையறை செய்யவோ தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்து கோவில்கள் மட்டுமே இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய தலைமை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் அரசு நிலங்கள், நீர்நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தாலும், இந்து கோவில்கள் மட்டுமே எவ்வித ஆட்சேபனைகளையும் பொருட்படுத்தாமல் இடிக்கப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள மற்ற மதத்தை சேர்ந்த வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுவதில்லை எம்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாகவும், ஆக்கிரமிப்பில் உள்ள வழிபாட்டு தலங்களை முறைபடுத்தவும், அவற்றிற்கு மாற்று இடம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக அரசிடம் அது போல் எந்த ஒரு திட்டமும் இல்லை எனவும் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த ல்வித பாரபட்சமும் பார்க்கக் கூடாது என்று தெரிவித்தனர். மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டிற்கு முறையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் காட்டவில்லை. எனவே உரிய ஆதாரங்களுடன் விரிவான மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வார காலத்திற்கு தள்ளி வைத்தனர்.