ஹைதராபாத் சம்ஷாபாத் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வைணவ ஆச்சாரியாரான ராமானுஜருக்கு 216 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சமத்துவ சிலை என பெயரிடப்பட்டுள்ளது. ராமானுஜரின் 1000 ஆண்டுகள் பூர்த்தியானதன் நினைவாக ரூ.1,200 கோடி செலவில், 45 ஏக்கர் பரப்பளவில் திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்டமான சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை
பிரதமர் மோடி
கடந்த 5-ம் தேதி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து இச்சிலையையும், இங்கு கட்டப்பட்டுள்ள 108 திவ்ய தேச வைணவ கோயில்களையும் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராம்நகருக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே, ராமானுஜரின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுயசார்பு இந்தியா
திட்டமான ஆத்மநிர்பார் குறித்து பிரதமர் மோடி பேசி வரும் நிலையில், சீன தயாரிப்பு சிலை தொடர்பான செய்திகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ராமானுஜரின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரரும் செய்தியை ஒப்பிட்டு, பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான
ராகுல் காந்தி
மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சமத்துவத்துக்கான சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியா சீனா நிர்பார் (சீனா தயாரிப்பு) என மாறிவிட்டதோ” என கேள்வி எழுப்பியுள்ளார்.