புதுடெல்லி: சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர் கூறியதாவது:
நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான அரசாணையை 16 செப்டம்பர் 2016-லேயே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையின் நான்காவது இணைப்பில் சிஎன்ஜியுடன் 18% ஹைட்ரஜன் கலந்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஹைட்ரஜன் எரிபொருள், வாகனங்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் 2020ஆம் ஆண்டே வெளியிடப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் அடிப்படையிலான போக்குவரத்து மற்றும் எரிபொருள், பேட்டரி தயாரிப்பது உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் தொடர்பான ஆராய்ச்சிக்கு உதவக் கூடிய திட்டங்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
மேலும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், உயிரிக்கழிவுகளை எரிபொருளாக்கி அதிலிருந்து உயர்தர ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான ஆலையை அமைத்துள்ளது.
சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது.
இதே போன்று தயாள்பாக் கல்விக்கழகம் தேசிய சூரியசக்தி நிறுவனமும் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி தொடர்பான பல்வேறு புதுமையான திட்டங்களை மேற்கொண்டிருக்கிறது.
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.