கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரித்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, கடம்பூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும், சுயேச்சைகளுக்கு ஆதரவான நிலை ஏற்படுவதற்கு காரணம் அங்கே உள்ள ஜமீன் குடும்பத்தினர் செல்வாக்கு செலுத்துவதாக வட்டரங்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவியாளர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி மாநில தேர்தல் ஆணையம் கடம்ப்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்தது. கடம்பூரில் தேர்தல் ரத்து செய்ததற்கான பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடம்பூர் பேரூராட்சியில், 3,000 வாக்காளர்கள் உள்ளனர். அங்கே 12 வார்டுகள் உள்ளன. கடம்பூரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 9 வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், அதிமுக எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை.
கடம்பூர் பேரூராட்சி நிர்வாக அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ்குமார், பிப்ரவரி 5-ம் தேதி பரிசீலனையின்போது, திமுக வேட்பாளர்கள் 3 பேரின் வேட்புமனுக்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியானது எனக் கூறி நிராகரித்தார். இது சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற வழி வகுத்தது. வேட்புமனுக்களை நிராகரித்த பிறகு, சுரேஷ் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
கடம்பூர் பேரூராட்சி வார்டுகளுக்கு, தற்போது அதிமுகவில் உள்ள, அப்பகுதியை சேர்ந்த, ஜமீன் குடும்பத்தினரின் ஆலோசனையின் பேரில், கட்சி வேறுபாடின்றி, சுயேச்சையாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தியதில் ஜமீன் குடும்பத்தினரின் செல்வாக்கு உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கடம்பூரில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுயேச்சைகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் புகார் எழுந்ததால், தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், சம்பந்தப்பட்ட வார்டுகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்படி, கடம்பூர் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட அந்த பகுதி ஜமீன் ஊதிய மகுடிக்கு கடம்பூர் பாம்பாக ஆடியுள்ளது. ஆனால், இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு தெரிய வந்ததையடுத்து கடம்பூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான டாக்டர் கே.செந்தில் ராஜ்ஜுகு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“