நீலகிரியில் யானைகள் வழக்கமாக வலசை செல்லும் வழித்தடத்தில் ரயில்வே சார்பில் சுவர் எழுப்பியதால் அவை பரிதவித்து நின்ற காட்சிகள் வெளியான நிலையில், அந்த சுவர் உடனடியாக இடிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இயல்பு கொண்ட யானைகள், தங்களது வழித்தடத்தை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் துல்லியமாக நினைவில் வைத்து, தடம் மாறாமல் செல்லக் கூடியவை.
கடந்த 2ஆம் தேதி வீடியோ ஒன்று வெளியானது.அதில் நீலகிரி மாவட்டம் ஹில்க்ரோவ் ரயில்நிலையத்தின் அருகே ரயில் தண்டவாளத்தை ஒட்டி ரயில்வே துறை சார்பில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அவ்வழியாக வந்த யானைக் குடும்பம் ஒன்று, தங்களது வழக்கமான வலசை வழித்தடத்தில் திடீரென எழும்பி நிற்கும் சுவரைப் பார்த்து குழப்பமடைகின்றன.
பின்னர் மெல்ல நடைபோட்டு, திசை மாறிச் செல்கின்றன. முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியரும், தமிழக சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் செயலாளருமான சுப்ரியா சாஹூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்
இந்தக் காட்சி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்த சுப்ரியா சாஹு, இது போன்ற இடங்களில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான முறையான வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும் என்றும், வன வாழ்வியலுக்கு அச்சுறுத்தல் தராத வகையில் அந்த கட்டுமானங்கள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கும் அந்த பதிவை டேக் செய்திருந்தார்.
இதனையடுத்து உடனடியாக அந்த சுவரை இடித்து அகற்ற ரயில்வே துறை உத்தரவிட்டது. அதன்படி சுவர் இடிக்கப்படும் வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சுப்ரியா சாஹு, ரயில்வே துறைக்கும் தமிழக வனத்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
வலசை செல்லும் போது தாம் இடும் சாணத்தின் மூலம் புதிய தாவரங்களை உருவாக்கும் திறன் கொண்ட யானைகளால்தான் காடுகள் இன்றளவும் உயிர்ப்போடு இருக்கின்றன. காடுகளின் செழுமைதான் மனிதன் உட்பட அனைத்து உயிர்களுக்கான முக்கிய ஜீவாதாரம். அதனை உணர்ந்து யானைகளை எந்த வகையிலும் தொல்லை செய்யாமல் இருப்பதுதான் மனித குலத்துக்கு நல்லது.