தமிழர்களின் நாட்டுப் பற்றுக்குப் பிரதமர் மோடியின் சான்றிதழ் தேவையில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:
நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது அல்ல என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது:
இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை வட இந்திய ஊடகங்கள் எனக்கு வழங்கியதை எனக்குக் கிடைத்த பாராட்டாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காகவே என்னை நான் அர்ப்பணித்துள்ளேன் என்பதை அகில இந்திய ஊடகம் ஒன்று அங்கீகரித்து இருக்கிறது என்ற அளவில் மகிழ்ச்சியோடு, அதே நேரத்தில் அடக்கத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்.
நான் நம்பர் ஒன் என்பதை விட, தமிழ்நாடு நம்பர் ஒன் என்று பெயரெடுக்க வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். அதுதான் என்னுடைய இலட்சியமும் இலக்கும் ஆகும். ஏதோ ஒரு துறையில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலுமே தமிழ்நாடு நம்பர் ஒன் ஆக வேண்டும். தொழில்துறையில் தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற சூழ்நிலை விரைவில் உருவாகப் போகிறது. 
ஒரு நிறுவனம் முதலீடு செய்கிறது என்றால் ஏதோ அது தனிப்பட்ட அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அல்ல. அதில் மாநிலத்தின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. நிதி மூலதனம் பரவுகிறது. அந்த வட்டாரம் வளர்கிறது. 
இவை அனைத்துக்கும் மேலாக, முதலீடுகளை அதிகமாக ஈர்க்கிறோம் என்றால் அந்த மாநிலம் அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள். சட்டம் ஒழுங்கு சீராகவும், அமைதி தவழும் மாநிலமாகவும் இருந்தால்தான் அந்த மாநிலத்தில் தொழில் முதலீடுகள் அதிகம் வரும். 
அந்த வகையில் அமைதி தவழும் மாநிலமாக, சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதுதான் எனக்கு உண்மையான பெருமை.
இந்த ஆட்சி மலர்ந்த இந்த எட்டு மாத காலத்தில் இதுவரை 5 அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இந்த அரசு நடத்தி இருக்கிறது. இதை விட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும்? 
சட்டமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள்தான் அதிக நேரம் பேசுகிறார்கள். பேச அனுமதிக்கப்படுகிறார்கள். சட்ட மன்றத்தில் கருத்துக்களைச் சொல்வதற்கு முழுமையாக அவர்களுக்கு நேரம் தரப்படுகிறது. இதை விட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும்?
சில நாட்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி., ராகுல்காந்தி அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். அவருக்குத் தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டேன். 
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று ராகுல்காந்தி சொன்னார். இதற்குப் பதில் சொன்ன பிரதமர் மோடி , தமிழ்நாட்டு மக்கள் தேசிய உணர்வு கொண்டவர்கள் என்றும் மறைந்த முப்படைத் தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தியது தமிழ்நாடு என்றும் சொல்லி இருக்கிறார்.
பாஜகவை விமர்சிப்பது என்பதை இந்தியாவையே விமர்சிப்பதாக அவரே திசை திருப்பிக் கொள்கிறார். ஆனால் நாட்டுக்காகப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் உள்ளிட்ட விடுதலை வீரர்களின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்திகளைக் குடியரசு நாள் அணிவகுப்பில் அனுமதிக்க முடியாது என்று சொன்னது யார்? 
குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட மற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளைவிடத் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது? 
தன்னுடைய பேச்சில் பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டிப் பேசும் பிரதமர் மோடி, பாரதியாரின் திருவுருவச் சிலையைக் குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுப்பில் அனுமதிப்பதில் என்ன பிரச்சினை? நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது அல்ல. 
தமிழர்களின் நாட்டுப்பற்றுக்குப் பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை.அதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது. தேசம் என்று அவர்கள் சொல்கிறார்களே.எது தேசம் என்பதில்தான் அவர்களுக்கும் நமக்குமான பிரச்சினை. வெறும் நிலப்பரப்புதான் தேசம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
இல்லை, இந்த மண்ணில் வாழும் மக்கள்தான் தேசம் என்று நாம் சொல்கிறோம். இந்த மண்ணையும் மக்களையும் புரிந்து கொள்ளாத வர்களாக, மதிக்காதவர்களாக,எதிராகச் செயல்படுகிறவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு இனமும், மொழியும் கலையும் பண்பாடும் கொண்டதுதான் இந்தியத் துணைக்கண்டம் என்கிறோம் நாம். 
இந்த நாட்டை, பல்வேறு அழகிய மலர்களைக் கொண்ட பூங்கொத்தாக நாங்கள் பார்க்கிறோம். அதனைப் பாதுக்காக்கவே போராடுகிறோம்.
நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவுக்கு எதிராக வெளிநடப்பு செய்ததன் மூலமாக, பாஜக தமிழ்நாட்டில் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 
இத்தகைய ஜனநாயக விரோத, மக்கள் விரோத, தமிழர் விரோத, தமிழ்நாடு விரோத சக்திகள் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல எல்லா தேர்தலிலும்  தோற்கடிக்கப் பட வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் தமது உரையின் போது குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.