Tamilnadu MPs oppose minister’s reply in hindhi: மக்களவையில் மதிமுக உறுப்பினர் கணேச மூர்த்தி தமிழில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பதில் அளித்ததற்கு தமிழகத்தைச் சேர்ந்த மக்களைவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் பதில் அளிக்கும்போது, அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேச வேண்டும் என்ற வேண்டுகோள், பல காலமாக பிற மொழி பேசும் மாநில உறுப்பினர்களால் வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான அமைச்சர்கள் ஹிந்தியிலே பதில் அளித்து வருகின்றனர்.
இதனால் உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், மக்களவையில் இன்று மதிமுக உறுப்பினர் கணேச மூர்த்தி,”தமிழ்நாடு அதிக முதலீடு பெறும் வகையில் மத்திய அரசாங்கம் என்ன முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது” என தமிழில் கேள்வி எழுப்பினார்.
அப்போது பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், நீங்கள் தமிழில் பேசியதால், முதலில் கூறிய திட்டம் என்ன என்பதை கவனிக்க தவறிவிட்டேன். அது என்ன திட்டம் என்று கேட்டார்.
உடனே எம்.பி., கணேச மூர்த்தி நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அமைச்சர் ஆங்கிலத்தில் தான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் கூற வந்ததை கூறுங்கள் என்று கூற, அதற்கு எம்.பி., கணேச மூர்த்தி கோபமாக, உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அமைச்சர்கள் ஹிந்தியில் பதில் அளிக்கிறார்கள் என்று கூறினார்.
அப்போது அமைச்சர் பியூஸ் கோயல், நான் ஹிந்தியில் பதிலளிக்கிறேன், என மொழிப்பெயர்ப்பு வசதி குறித்து சபை ஊழியர்களிடம் கேட்டார்.
உடனே இதற்கு தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.