கிருஷ்ணகிரி: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஒரு மகத்தான, மாபெரும் வெற்றியை பெரும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்தாண்டு காலம் அதிமுக அரசு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசு செய்த சாதனைகளை இன்றைக்கு தமிழக மக்கள் எண்ணிப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சி வந்ததற்கு பின்னால், அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத ஒரு சூழல் இருக்கிறது என்பதை மக்கள் வேதனையுடன் எண்ணி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அதிமுக ஒரு மகத்தான, மாபெரும் வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுகக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை (9.2.2022), கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். இக்கூட்டத்தில், கே.பி. முனுசாமி, MLA, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஞ. பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டோரும், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.