தஞ்சாவூர் அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமணி (36). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லைவில்லையாம். அதனால், தனக்கு திருமணம் செய்து வைக்காததால் வைரமணி தினமும் குடித்து விட்டு வந்து தன் தாய் மாரியம்மாள் (60), அண்ணன் முத்தமிழ் ராஜா (40) ஆகிய இருவரிமும் சண்டையிட்டு வந்திருக்கிறார்.
அந்த வகையில், நேற்று முன் தினம் இரவும் மது போதையில் வைரமணி இருவரிடமும் சண்டையிட்டதாக தெரிகிறது. அதில், ஆத்திரமடைந்த அண்ணன் மற்றும் தாய் இருவரும் வைரமணியை அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை வீட்டின் பின்புறம் வைரமணி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தமிழ் பல்கலைக்கழக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வைரமணி உடலை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தாய் மாரியம்மாள், அண்ணன் முத்தமிழ் ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம், “வைரமனி தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி அம்மா மற்றும் அண்ணனிடம் கூறி வந்துள்ளார். அவர்களும் வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால், அமையவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வைரமணி சண்டை போட்டிருக்கிறார்.
வைரமணி, தன் அம்மாவிடம் `எனக்கு 36 வயதாகி விட்டது ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை. என்னை ஒண்டிக்கட்டையாகவே இருக்க வைக்கப்போறீங்களா’ என கேட்டிருக்கிறார். அப்போது வைரமணி, மாரியம்மாள், முத்தமிழ் ராஜா மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாயும், அண்ணனும் வைரமணியை அடித்துள்ளனர். அதில், காயம்பட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்த வைரமணி இறந்துவிட்டார். இது தொடர்பாக அண்ணன் முத்தமிழ்ராஜா, தாய் மாரியம்மாள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.
Also Read: திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கு: திருச்சி சமயபுரத்தில் இருவர் அதிரடி கைது!