ஆமதாபாத்: புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அசத்துகிறது. இன்று நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்று, தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது.
இந்தியா, விண்டீஸ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்மோதுகின்றன. முதல்சவாலில் இந்தியா சுலபமாக வென்றது. இன்று இரண்டாவது போட்டி(பகலிரவு), உலகின் பெரியஆமதாபாத் மைதானத்தில்நடக்க உள்ளது. இது இந்தியாவின் 1001 வது போட்டி.
வருகிறார் ராகுல்:
இந்திய அணியின் ‘பேட்டிங்’ வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் ரோகித் சர்மா(60), இளம் இஷான் கிஷான்(28) சேர்ந்து கலக்கல் துவக்கம் தந்தனர். இன்று துணைக்கேப்டன் லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புவதால், புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. 41 ஒருநாள் போட்டிகளில் 1585 ரன் எடுத்துள்ளார் ராகுல். இதில், துவக்க வீரராக 21 போட்டியில் 884 ரன்(46.52 சராசரி) குவித்துள்ளார். இவர் துவக்கத்தில் களமிறங்கினால், இஷான் நீக்கப்படுவார். ஒருவேளை ‘மிடில் ஆர்டரில்’ வந்தால், தீபக் ஹூடாவுக்கு ‘கல்தா’ கொடுக்கப்படும்.
சமீப காலமாக தடுமாறும் விராத் கோஹ்லி எழுச்சி பெற வேண்டும். தனது 71வது சர்வதேச சதத்தை எட்ட முடியாமல் இரண்டு ஆண்டுகளாக தவிக்கிறார். இந்த குறையை இன்று நிவர்த்தி செய்தால் நல்லது. பின் வரிசையில் சூர்யகுமார், ரிஷாப் பன்ட் நம்பிக்கை தருகின்றனர். பந்துவீச்சில் சகால், வாஷிங்டன் சுந்தர் ‘சுழல்’ ஜாலம் காட்டுவது பலம். வேகத்தில் மிரட்ட முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா உள்ளனர்.
போலார்டு பலம்:
விண்டீஸ் அணி தொடர்ந்து அலட்சியமாக விளையாடுகிறது. கடந்த 16 போட்டியில் 10ல் 50 ஓவர்களை முழுமையாக பேட் செய்யவில்லை. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 43.5 ஓவரில் 176 ரன்களுக்கு சுருண்டது. இன்று பொறுப்பாக விளையாட வேண்டும். கேப்டன் போலார்டு, டேரன் பிராவோ, ‘ஆல்-ரவுண்டர்’ ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன் போன்ற அதிரடி பேட்டர்கள் அசத்தினால், கரை சேரலாம். பந்துவீச்சில் கீமர் ரோச், அல்ஜாரி ஜோசப், பாபியன் ஆலன் கைகொடுக்கலாம்.
பயிற்சியில் தவான்:
விண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜுக்கு ‘கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்ட தவான், ஸ்ரேயாஸ் நேற்று சிறிது நேரம் மற்ற இந்திய வீரர்களுடன் சேர்ந்து வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் இன்று நடக்கும் போட்டியில் இடம் பெற வாய்ப்பு இல்லை.
65:
ஒருநாள் அரங்கில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மொத்தம் 134 போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 65 ல் வெற்றி பெற்றது. விண்டீஸ் அணி 63 ல் வென்றது. 2 போட்டி ‘டை’ ஆக, 4 போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.
* கடைசியாக மோதிய 10 போட்டிகளில் இந்தியா 8ல் வென்றது. 1ல் மட்டும் விண்டீஸ் வெற்றி பெற்றது. 1 போட்டிக்கு முடிவில்லை.
மழை வருமா:
இரண்டாவது போட்டி நடக்கவுள்ள ஆமதாபாத்தில் இன்று வானம் தெளிவாக காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 29, குறைந்தபட்சம் 19 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர 4 சதவீதம் மட்டும் வாய்ப்புள்ளது.
ஆடுகளம் எப்படி
ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தின் ஆடுகளம் மந்தமாக காணப்படும். ரன் எடுப்பது கடினமாக இருக்கும். சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும்.