“நீங்கள் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது: என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்து இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராகப் பிரதமர் மோடி சில கருத்துக்களை முன்வைத்தது அடுத்து ராகுல்காந்தி அவருக்குப் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எனது தாத்தா தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர். பிரதமர் மோடி என் தாத்தாவைப் பற்றி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை.
பிரதமர் இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளார். ஒன்று மிகவும் பணக்காரர்கள் வாழும் இந்தியா. மற்றொன்று வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் மக்களுக்கான இந்தியா. அவர் இந்தியாவை ஆபத்தை நோக்கித் தள்ளுகிறார்.
Also Read: `தமிழகத்தில் திமுக ஆட்சியைக் கலைத்தது காங்கிரஸ்தான்; எனக்கும் நெருக்கடி கொடுத்தார்கள்’ -பிரதமர் மோடி
சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான் அரசாங்கத்திற்கு ஒன்றை மட்டும் அறிவுறுத்திக் கொள்கிறேன். தயவு செய்து எழுந்திருங்கள். நீங்கள் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள், இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. என் கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. உண்மையைப் பேசுவதால் காங்கிரஸைக் கண்டு பாஜக பயப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.