லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கத்தோலிக்க பள்ளியின் நன்கொடை பணத்தில் இருந்து ரூ.6.23 கோடி திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கலிபோர்னியாவை சேர்ந்த மேரி மார்கரெட் க்ரூப்பர் (வயது 80) என்ற கன்னியாஸ்திரி, செயின்ட் ஜேம்ஸ் கத்தோலிக்க பள்ளியில் 10 ஆண்டுகாலம் முதல்வராக இருந்துள்ளார். அப்போது தான் 8,35,000 டாலர் (ரூ.6.23 கோடி) திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். திருடிய பணத்தை அந்த கன்னியாஸ்திரி சூதாட்டத்திற்கும், கோடையில் சுற்றுலாப் பயணிகள் கூடிவரும் லேக் தஹோ ரிசார்ட்டுகளுக்கு செல்வதற்கும் மற்றும் குளிர்காலத்தில் பனிச்சறுக்கு போன்ற ஆடம்பரமான சொகுசுப் பயணத்திற்கும் பயன்படுத்தியுள்ளார்.
கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நன்கொடை பணத்தை, கன்னியாஸ்திரியின் கட்டுப்பாட்டில் உள்ள ரகசிய கணக்குகளுக்கு மாற்றி இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் க்ரூப்பர் அளித்த வாக்குமூலத்தில், ‛நான் பாவம் செய்தேன், நான் சட்டத்தை மீறிவிட்டேன், எனக்கு எந்த மன்னிப்பும் இல்லை, எனது குற்றங்கள் என்பது எனது சபதம், கட்டளைகள், சட்டம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக பலர் என் மீது வைத்திருந்த புனித நம்பிக்கையை மீறுவதாகும்’ எனக் கூறினார்.
இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி ஒடிஸ் டி ரைட், ‛குற்றம் சாட்டப்பட்ட நீங்கள் (க்ரூப்பர்) பல ஆண்டுகளாக நல்ல ஆசிரியராக இருந்துள்ளீர்கள். ஆனால், ஏதோ ஒரு இடத்தில் பாதை மாறிவிட்டீர்கள். அதனை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்’ எனக் கூறியதுடன், கன்னியாஸ்திரி க்ரூப்பிருக்கு ஓராண்டு மற்றும் ஒரு நாள் சிறை தண்டனையும், பள்ளிக்கு 8,00,000 டாலர் (ரூ.5.99 கோடி) திருப்பி செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
Advertisement