கொரோனா முதல் அலையின்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் கைவிட்டது பாஜக அரசு. கை கொடுத்தவை எதிர்க்கட்சிகளும், பிற தன்னார்வத் தொண்டர்களும். அவர்கள் யாரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியிருக்கக் கூடாது என்று சொல்ல வருகிறாரா பிரதமர்
நரேந்திர மோடி
என்று கேட்டுள்ளார்
காங்கிரஸ்
தலைவர்
பிரியங்கா காந்தி
வத்ரா.
பிரதமர் மோடி நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் ஆற்றிய உரை அது. அந்த உரையில் அவர் குறிப்பிட்ட பல விஷயங்கள் விவாதமாகியுள்ளன.
குறிப்பாக புலம் பெயர்ந் தொழிலாளர்கள் குறித்து அவர் பேசியது சர்ச்சையும் ஆகியுள்ளது. பிரதமர் மோடி நேற்று தனது பேச்சின்போது குறிப்பிடுகையில், கோவிட் முதல் அலையின்போது காங்கிரஸ் கட்சி ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரயில் டிக்கெட் கொடுத்து மும்பையிலிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்தது. அதேசமயம், டெல்லி அரசு தனது மாநிலத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அங்கிருந்து போகுமாறு கூறி பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தது. இதன் விளைவாக, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கோவிட் வேகமாக பரவி விட்டது என்று கூறியிருந்தார்.
அதாவது, மேற்கண்ட மாநிலங்களில் கோவிட் பரவ காங்கிரஸும், ஆம் ஆத்மியுமே காரணம் என்பது போல பிரதமரின் பேச்சு அமைந்திருந்தது. இது காங்கிரஸார் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் கடும் கொதிப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
கோவாவில் நேற்று தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த பிரியங்கா இதுகுறித்து கருத்து கூறுகையில், உங்களால் கைவிடப்பட்ட, வீடு திரும்புவதற்கு வேறு வழி தெரியாமல், கால் நடையாகவே பல நூறு கிலோமீட்டர் நடந்து சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யாரும் உதவக் கூடாது என்று பிரதமர் சொல்ல வருகிறாரா? மோடிக்கு என்னதான் வேண்டும்? அவர் என்னதான் நினைத்துக் கொண்டுள்ளார்? அவர் நடத்திய பிரமாண்ட கூட்டங்களுக்கெல்லாம் என்ன அர்த்தம்? அதையெல்லாம் அவர் மறந்து விட்டாரா என்று ஆவேசமாக கேட்டுள்ளார்.