பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவர்களது உரிமையாகும். அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை அணிய அவர்களுக்கு உரிமை உள்ளது என்று
காங்கிரஸ்
தலைவர்
பிரியங்கா காந்தி
கூறியுள்ளார்.
கர்நாடகத்தின்
உடுப்பி
மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் பியூசி கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீரென தடை விதிக்கப்பட்டது. அவர்கள் ஹிஜாப்புடன் கல்லூரிக்குள் வரக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். இதனால் போராட்டம் வெடித்தது. தற்போது இது கர்நாடகத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கும் பரவியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இதன் உச்சமாக ஒரு கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றிய இந்துத்வா மாணவர்கள் அதற்குப் பதில் காவிக் கொடியை பறக்க விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேச விரோத காரியத்தில் ஈடுபட்ட இந்த மாணவர்களைக் கைது செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், பிகினியோ, முக்காடோ, ஜீன்ஸோ, ஹிஜாப்போ எதுவாக இருந்தாலும் அதை அணியும் உரிமை பெண்களுக்கு உண்டு. தனக்கு எது தேவை என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கான உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி.