நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட இலக்காக கொண்டு தீவிரமாக செயல்பட்டுவரும் திமுக, கொங்குவில் சினிமா இயக்குனர் கரு பழனியப்பனை திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய களம் இறக்கியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் திமுக தவறவிட்டாலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்று திமுகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சி மட்டுமல்ல, கோவை மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலம் முழுவதும் திமுக பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும் என்று இலக்காகக் கொண்டு திமுக நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.
திமுகவில் கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் அனைத்து இடங்களையும் கைப்பற்றி கோவையை திமுகவின் கோட்டையாக்க 6 மாதங்களுக்கு முன்னரே தனது பணியைத் தொடங்கினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு திரும்பபெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்த பிறகு, கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரு இனிப்பு செய்தி கிடைத்தது. பொள்ளாச்சி தொகுதியில் உள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி ஆடாமலேயே ஜெயித்து காட்டியுள்ளது. அதே போல, கோவை மாநகராட்சியில் பிரம்மாண்ட வெற்றி இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், கோவையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும், “நாம் கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.
திமுக கோவை மாவட்டத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்ற பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவைக்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை பட்டியலிட்டார். மாநிலத்தின் நிதி நிலை மோசமாக இருந்தாலும், கோவையில் சாலைகளை மேம்படுத்தவும், தெருவிளக்குகள் அமைக்கவும், கழிவுநீர் மேலாண்மைக்காகவும் முதல்வர் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதுமட்டுமில்லாமல், வரும் நாட்களில் கோவை மாவட்டத்தில் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
கோவை மாவட்டத்தில் பிரம்மாண்ட வெற்றியை இலக்கு நிர்ணயித்துள்ள திமுக, கொங்கு மண்டலத்தில் சினிமா இயக்குனர் கரு பழனியப்பனை திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய களம் இறக்குகிறது. இயக்குனர் கரு பழனியப்பன், கோவை மாநகராட்சி, பொள்ளாச்சி, மதுக்கரை, கருமத்தம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிப்ரவரி 15-ம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார் என்றும், மறுநாள் திருப்பூரிலும், பிப்ரவரி 17-ம் தேதி ஈரோட்டிலும் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பிரம்மாண்ட வெற்றியை இலக்காகக் கொண்டுள்ள திமுக, சினிமா இயக்குனர் கரு பழனியப்பனை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய களம் இறக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“