புதுச்சேரி: ஒமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் கரோனா பரவல் காணமாக புதுச்சேரியில் கடந்த 40 நாட்களில் மட்டும் 74 பேர் உயிரிழந்திருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
“புதுவையில் நேற்று 2,322 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் தற்போது 3,086 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 538 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுச்சேரியில் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், நடப்பாண்டில் மட்டும் 74 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,955 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2வது தவணை உட்பட 15 லட்சத்து 50 ஆயிரத்து 093 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த டிசம்பர் மாதத்தில் 8 பேர் தொற்றால் பலியாகிருந்தனர். ஜனவரி 1ம் தேதியன்று புதுச்சேரியில் 1881 பேர் இறந்திருந்தனர். அதைத்தொடர்ந்து ஜனவரியில் புத்தாண்டு கொண்டாட்டம் பல நிகழ்வுகள் தடையின்றி புதுச்சேரியில் நடந்தன. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் தொற்றின் வேகம் அதிகரித்தது. ஜனவரி 31ம் தேதியன்று 1931 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை இம்மாதத்தில் மட்டும் புதுச்சேரியில் 50 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
தொற்றின் பாதிப்பு குறைந்தாலும் இறப்பு தொடர்கிறது. பிப்ரவரி மாதத்தில் இன்று வரை 24 பேர் இறந்துள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 74 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய அளவில் பரிசோதனை தொற்று சதவீதம் தினசரி 4.5 ஆக உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 8.5 சதவீதமாக உள்ளது. தொற்றால் இறப்போர் சதவீதம் புதுச்சேரியில் 1.19 ஆக உள்ளது. நோயிலிருந்து குணமடைவோர் சதவீதம் 96.94 ஆக இருக்கிறது “
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.