கொல்கத்தா: போலீஸ் அதிகாரிகளை மிரட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அம்மாநில ஆளுநரை பதவியில் நீக்கக் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே முட்டல் மோதல் நீண்ட காலமாக இருந்து வருகிறது. காவல்துறை அதிகாரிகளை ஆளுநர் மிரட்டுவதாக குற்றம்சாட்டிய முதல்வர் மம்தா பானர்ஜி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஆளுநரை பின்தொடர்வதில் இருந்து வெளியேறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஆளுநர், ‘மாநிலத்தின் நிர்வாக விவகாரங்கள் மற்றும் சட்ட மன்றத்தின் தீர்மானங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவது, அரசியலமைப்பின் 167வது பிரிவின் கீழ் முதல்வரின் அரசியலமைப்பு கடமை’ என்று கூறினார். இவ்வாறாக முதல்வருக்கும், ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் ராம்பிரசாத் சர்க்கார் என்பவர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளை (பிப். 11) நடக்கவுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுபேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஆளுநருக்கு எதிராக இதுபோன்ற மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அரசியலமைப்பில் உள்ள விதிகளின்படி ஆளுநர் நியமிக்கப்படுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது’ என்றார். அதேநேரத்தில், அம்மாநில அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சரிதான் என்று கூறினார்.