இந்தியக் காணொலிப் பகிர்வுச் செயலியான ரொபோஸோ கூகுள் ப்ளே ஸ்டோரில் 10 கோடி பயனர்களைக் கடந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் அறிவிப்பின் படி, கடந்த ஜூன் மாதம் கூகுள் ப்ளே ஸ்டோரில், சமூகதளச் செயலிகளில் முதலிடத்தை ரொபோஸோ ஏற்கெனவே பெற்றிருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகளை மக்கள் தேடுவது அதிகரித்துள்ளதால் இந்த நிலை என்று தெரிகிறது.
ரொபோஸோவின் உரிமையாளரான க்ளான்ஸ் நிறுவனத்துக்கு இந்த விஷயம் இன்னொரு மைல்கல் என்று கூறப்படுகிறது.
“10 கோடி பயனர்களைத் தாண்டிய முதல் இந்திய குறு காணொலி செயலியாக இருப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந்திய வாடிக்கையாளர்களும், கலைஞர்களும் ரொபோஸோவை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது” என இன்மொபி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி நவீன் திவாரி கூறியுள்ளார்.
12 இந்திய மொழிகளில் கிடைக்கும் ரொபோஸோவில் ஒவ்வொரு நாளும் இரண்டு பில்லியன் பார்வைகள் மொத்தமாக வீடியோக்களுக்குக் கிடைக்கின்றன. எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் செயலியும், காணொலியை எடிட் செய்வதற்கான சிறந்த வசதியும், பயனர்கள் தங்கள் தாய்மொழியில் கலந்துரையாட ஏதுவான குழுக்களுமே இந்தியாவில் முதன்மைச் செயலியாக ரொபோஸோவை உருவாக்கியுள்ளது.
இந்த வெற்றியோடு அமெரிக்கா, சீனாவுக்கு ஈடாக இந்தியாவையும் முக்கியமான டிஜிட்டல் மையமாக மாற்ற முடியும் என்று நம்புவதாக திவாரி கூறியுள்ளார்.