புதுடெல்லி: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என ஒன்றிய அரசு கூறியதை தொடர்ந்து, டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் கர்நாடகா முதல்வர் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது. இந்நிலையில், ‘தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது,’ நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நேற்று முன்தினம் திட்டவட்டமாக அறிவித்தது. இது, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.டெல்லியில் நேற்று முன்தினம் மதல் முகாமிட்டுள்ள முதல்வர் பொம்மை, நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள், எம்பி.க்களுடன் நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை நேற்று முன்தினம் முன்வைத்தார்.இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு கைவிட்டது தொடர்பாக, டெல்லியில் உள்ள கர்நாடகா இல்லத்தில் சட்ட நிபுணர்களுடன் நேற்று அவர் அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தவிர, மாநிலங்களுக்கு இடையிலான கிருஷ்ணா, மகதாயி உள்ளிட்ட நதி நீர் திட்டங்கள் குறித்தும் ஆலோசித்தார்.