நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, ரயில்வே பட்ஜெட், மத்திய என தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக மத்திய அரசு தாக்கல் செய்து வருகிறது. அதேசமயம், இந்தியாவில் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் மூலம், விவசாயத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், விவசாயத்துறை வளர்ச்சி விரைவு பெறும் என்பதாலும் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த அமைந்த பிறகு வேளாண் துறைக்கென தனியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது போல், விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது பலராலும் வரவேற்கப்பட்டது. முன்னதாக, ஆந்திரப்பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை பின்பற்றி மத்திய அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், விவசாயத்திற்கு ஆண்டுதோறும் தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சகம் அளித்துள்ள பதிலில், விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை எனவும் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் விதத்தில் மத்திய பட்ஜெட்டில் திட்டங்கள் இடம்பெறுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், 2021ஆம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 2021ஆம் ஆண்டில் 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.