மாலபேயில் 256 வீட்டுத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் வீடற்ற நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான 5,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
நடுத்தர குடும்பங்களுக்கான இந்த அடுக்குமாடி குடியிருப்பு மாலபே புதிய புபுது மைதானத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
20 மாடிகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஜனவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக, நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
“கிரிசாண்டோ அபார்ட்மென்ட்” என அழைக்கப்படும் இந்த வீட்டு திட்டம், புதிய வேலை வாய்ப்புகளை தேடுபவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டுத் திட்டமாகும்.
இந்தக் வீடுகளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றால் கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.
இந்த கடன் வசதி மாதத்திற்கு குறைந்தபட்சம் 6.25 சதவீதம் வட்டி விகிதத்திற்கு உட்பட்டதாகும்.
25 ஆண்டுகளுக்கு மாதாந்திர தவணை முறையில் கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியும் இந்த வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றது.