வேட்பாளர் 20 பேருடன் சென்று வீடு வீடாக பிரசாரம் செய்யலாம்- தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் கமி‌ஷன் மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூட்டங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அனுமதிக்கப்படமாட்டாது.

சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள், சிலைகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரப் பொருள்கள், அனுமதிக்கப்படமாட்டாது.

மத சார்புடைய சின்னங்கள் பயன்படுத்தியோ, அல்லது சமூகம் மற்றும் சாதி அடிப்படையான உணர்வுகளை பயன்படுத்தியோ வாக்குசேகரிக்க கூடாது.

மத அல்லது மொழி அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடையே வெறுப்புணர்வு அல்லது இறுக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது அதிகப்படுத்தும் விதமாகவோ செயல்படுதல் கூடாது.

பிறவேட்பாளர்களின் தனிப்பட்ட குணங்கள் அல்லது நடத்தை குறித்து அவரது வெற்றி வாய்ப்பினை பாதிக்கும் நோக்கில் விமர்சிக்கக் கூடாது.

பிறவேட்பாளர்களின் கூட்டங்கள், பிரசாரங்களில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

வேட்பாளர்கள் அதிகபட்சம் 20 ஆதரவாளர்களுடன் வீடு வீடாக பிரசாரத்தை மேற்கொள்ளலாம்,

வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்திற்கு அச்சிடப்பட்ட அறிவிப்புகளைப் பயன்படுத்தலாம்.

வேட்பாளர்கள், உள்ளரங்கமாக இருப்பின் 50 சதவீத திறன் அடிப்படையிலும் மற்றும் திறந்தவெளி அரங்கமாக இருப்பின் 30 சதவீதம் திறன் அடிப்படையிலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற்று பிரச்சாரக் கூட்டம் நடத்தலாம்.

(அதாவது எவ்வளவு பெரிய அரங்கமாக இருந்தாலும் அதிகபட்சம் 500 பேர்தான் இருக்கவேண்டும்).

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை தெரிவித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெறப்படவேண்டும்

வேட்பாளர் அல்லது முகவருக்கு ஒரு வாகனத்திற்கு மட்டுமே பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

பிரச்சாரம் நடத்த தடையில்லா சான்று அனுமதி அளிக்கும்போது முதலில் அனுமதி கோருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.

பாதயாத்திரை, சைக்கிள் மற்றும் வாகன பேரணிக்கு கொரோனா தொற்று காரணமாக வருகிற 11- ந் தேதி வரை அனுமதி இல்லை.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் எண்ணிக்கை 40 லிருந்து 30 ஆகவும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் எண்ணிக்கை 20லிருந்து 15 என மாநில தேர்தல் ஆணையத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… சென்னையில் 15 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.