பெங்களூரு: சிறுபான்மை வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி வழங்ககோரி தாக்கல் செய்துள்ள வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷித் மாற்றி உத்தரவிட்டார். இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் இடைக்கால தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறுபான்மை வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்து கடந்த 5ம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு முதல்நிலை கல்லூரி மாணவிகள் சார்பில் தாக்கல் செய்துள்ள நான்கு மனுக்கள் மீதான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது நீதிபதி கிருஷ்ணா தீட்சித், `இந்த வழக்கின் அம்சங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, இது மிகவும் முக்கியமான வழக்காக உள்ளது. ஒருநபர் நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவதை காட்டிலும் இரண்டிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கினால் சிறப்பாக இருக்கும்’ என்றார். இதையடுத்து மனுதாரர் வக்கீல் காமத் வாதிடுகையில், `நீதிமன்றம் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுகொள்கிறோம். ஆனால் நடப்பு கல்வியாண்டின் காலம் இன்னும் இரண்டு மாதம் மட்டுமே உள்ளது. ஆகவே மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும். அதற்கு வசதியாக சீருடை தொடர்பாக மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்றார். ’இதை கேட்ட நீதிபதி, ‘இன்று ஒரு தீர்ப்பு, தலைமை நீதிபதி அமர்வு ஒரு தீர்ப்பு என்று இருப்பது சரியாக இருக்குமா’ என்றார். உடனே அரசு தலைமை வழக்கறிஞர் பிரபுலிங்க நாவட்கி, ‘உயர் அமர்வு விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் தங்கள் கையில் உள்ளது. விரைவில் இந்த வழக்கு முடிய வேண்டும் என்பது அரசின் விருப்பம்’ என்றார். இதை கேட்ட நீதிபதி கிருஷ்ணா தீட்சித், ‘ நீதிமன்றம் வழங்கும் உத்தரவு, அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். ஆகவே இவ்வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றம் செய்கிறேன். இதை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் மூலம் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்’ என்றார். இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்துள்ளதால், விசாரணை நடத்தும் நீதிபதிகளின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.* மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்கர்நாடகாவில் ஹிஜாப்-காவி சீருடை தொடர்பாக போராட்டங்கள் குறித்து மக்களவையில் விவாதிக்க நேரம் ஒதுக்கி கொடுக்கும்படி பெங்களூரு ஊரக தொகுதி மக்களவை உறுப்பினர் டி.கே.சுரேஷ், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று கடிதம் கொடுத்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்று இன்று விவாதிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.* போராட்டம் நடத்த தடைமாணவர்கள் பிரச்னையை அடிப்படையாக வைத்து பெங்களூருவில் அரசியல் கட்சிகள், தன்னார்வு தொண்டு அமைப்புகள், மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்த இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.* மபி.யில் தடை இல்லைமத்திய பிரதேசத்தில் கல்வி துறை அமைச்சர் இந்தர் சிங் பார்மர் நேற்று முன்தினம், கர்நாடகாவை போல் மபி.யிலும் ஹிஜாப் அணி தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நேற்று அவர் அளித்த விளக்கத்தில், ‘மத்தியப் பிரதேச கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை. அது போன்ற திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை,” என்றார்.* நீதிமன்ற உத்தரவை ஏற்போம்கர்நாடகா உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘ஹிஜாப் விவகாரத்தால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் கிடையாது. வெளியில் இருந்து வந்தவர்கள். வன்முறையை தூண்டியது பற்றி தீவிர விசாரணை நடக்கிறது. ஹிஜாப் அணிய அனுமதி கோரி சில மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளை ஏற்போம்,’’ என்றார்.* மாணவி முஸ்கான் விளக்கம்கர்நாடகாவில் முஸ்கான் என்ற மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு புர்கா அணிந்து வந்தபோது, ‘ஜெய்ஸ்ரீராம்’ என முழுக்கமிட்டு மாணவர்கள் கும்பல் தடுத்தது. அதற்கு பதிலடி தரும் வகையில் முஸ்கானும் மத முழக்கமிட்டார். இது பற்றி நேற்று அவர் கூறுகையில், ‘‘எனது கட்டுரையை சமர்பிக்கவே கல்லூரிக்கு சென்றேன். அப்போது என்னை வழிமறித்த சிலர், புர்காவை கழற்றி விட்டு கல்லூரிக்குள் செல்லும்படி மிரட்டினர். அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு நான் கல்லூரிக்குள் நுழைந்தபோது, அவர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். நான் ‘அல்லாஹூ அக்பர்’ என்று முழக்கமிட்டேன். இதற்காக, அவர்களில் சிலர் விரல்களை உயர்த்தினர். எனக்கு சிறிது பயம் ஏற்பட்டது. பின்னர், கல்லூரி ஆசிரியர்களை பார்த்ததும் தைரியம் வந்தது,’’ என்றார்.