கர்நாடக மாநிலம் பெங்களூரில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு,
ஹிஜாப்
அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவித் துண்டு போன்ற உடைகளை அணிந்து வந்தனர். இதனால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் வர விடாமல் கல்லூரி நிர்வாகம் தடுத்தது. முஸ்லிம் மாணவர்களுக்கு போட்டியாக, இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நேற்று, சிவமோகாவில் உள்ள ஒரு கல்லூரியில், தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியை மாணவர்கள் ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை கை மீறிப் போனதை அடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு, வரும் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாணவிகள் தாக்கல் செய்த வழக்கு, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது. மேலும், கர்நாடக மாநில அரசின் ஒரே சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்து விட்டது.
இதற்கிடையே, தலைநகர்
பெங்களூரு
முழுவதும் ,பள்ளி, கல்லூரி மற்றும் பிற கல்வி நிறுவனங்களின் 200 மீட்டர் சுற்றளவில் எந்தக் கூட்டம் மற்றும் போராட்டம் நடத்த அடுத்த இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து பெங்களூரு நகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.