பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்க வசதியாக அரசு ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஒடிசா
மாநிலத்தில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், ஐந்து கட்டங்களாக
பஞ்சாயத்து தேர்தல்
நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஐந்தாவது கட்ட தேர்தல், 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தலில்
அரசு ஊழியர்கள்
தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில், அவர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து ஒடிசா மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக அனைத்துத் துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
அனைத்து அரசு கிராமப் பஞ்சாயத்துகளில் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள அரசு நிறுவனங்கள், வாரியங்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் உயர்நிலை அமைப்புகள் போன்றவற்றின் ஊழியர்கள், தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். இதற்காக அவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதாவது, வாக்குப்பதிவு முந்தைய நாள், வாக்குப்பதிவு பிந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு வழங்கலாம்.
குறிப்பிட்ட கிராம பஞ்சாயத்துகளில் பதிவு செய்திருப்பதைக் காட்ட ஊழியர்களின் எழுத்துப்பூர்வ விண்ணப்பம் போதுமானது. நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படாத வகையில், துறைத் தலைவர்கள் அரசு ஊழியர்களுக்கு மூன்று நாட்களுக்கு மிகாமல் சிறப்பு விடுப்பு வழங்கலாம். மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களை விடுமுறை நாளாக அறிவிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.