செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள நிகழ்ச்சியில் 5ஜி அம்சம் இருக்கும் நான்கு புதிய ஐஃபோன் 12 வரிசை ஸ்மார்ட்ஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஹோம், விளையாட்டு என மற்ற சந்தைப் பொருட்களையும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்கிறது.
இணையம் மூலமாக நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் 5.4 இன்ச் அகல ஐஃபோன் 12 மினி, 6.1 இன்ச் அகல ஐஃபோன் 12 மற்றும் ஐஃபோன் 12 ப்ரோ, 6.7 இன்ச் அகல ஐஃபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மற்றும் மலிவு விலை வாட்ச் எஸ்ஈ ஆகிய பொருட்களை அறிமுகம் செய்தது. புதிய மாடல் ஐஃபோன்களால் 5ஜி நெட்வொர்க் சேவயைப் பயன்படுத்த முடியும். (5ஜி சேவை இருக்கும் இடங்களில் மட்டும்)
மேலும் இந்த புதிய ஃபோன்களில் ஓஎல்ஈடி திரைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐஃபோன் 12ன் விலை 699லிருந்து 749 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்றும், ஐஃபோன் 12 மேக்ஸின் விலை 799லிருந்து 849 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்றும், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் 1100லிருந்து 1200 டாலர்கள் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஐஓஎஸ் 14 என்று அறிமுகமாகும் என்பது பற்றியும் இந்த விழாவில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மேலும், இந்நிகழ்ச்சியில் கடந்த சில காலமாகவே தயாரிப்பில் இருந்து வரும் மினி என்கிற ஹோம்பாட் ஸ்பீக்கரும், புதிய ஹெட்ஃபோன் ஒன்றும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சமீபத்தில் போஸ், ஸோனோஸ், லாஜிடெக் ஆகிய நிறுவனங்களின் ஒலி சார்ந்த தயாரிப்புகளின் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தியது. இதனால் ஆப்பிளின் ஒலி சார்ந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இது சரியான நேரம் என்று சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வேகமான ப்ராசஸருடன் கூடிய ஆப்பிள் டிவி, புதிய விளையாட்டுகள் கொண்ட ஆப்பிள் ஆர்கேட் ஆகியவை பற்றிய தகவல்களும் செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்று கூறப்படுகிறது.