டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரை 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனை புரிந்துள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக செயற்கை கோள்களை செலுத்துவதில், இஸ்ரோவும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. சந்திரனுக்கு ஏற்கனவே விண்கலத்தை அனுப்பிய நிலையில், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் சத்திரயான்3 விண்கலத்தை அனுப்ப தயாராகி வருகிறது.
இதற்கிடையில் வரும் 14ந்தேதி பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது. இதுமட்டுமின்றி இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் வகையிலான ககன்யான் (Gaganyaan) விண்கலம் விண்ணுக்கு செலுத்த தயாராகி வருகிறது. இந்த விண்கலத்தில் மூன்று பேர் விண்ணுக்கு சென்று வரும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய அணுசக்தித்துறை மந்திரி ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இதுவரை இந்தியாவின் 129 செயற்கைக்கோள்களையும், 36 நாடுகளைச் சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் 1975 முதல் விண்ணில் செலுத்தியுள்ளது என தெரிவித்தார்.