லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், பாக்பத், காஜியாபாத், புலந்த்ஷார், அலிகார், மதுரா மற்றும் ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப் பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்கட்ட தேர்தல் நடக்கவுள்ள மேற்கு உ.பி. என்பது ஜாட் சமுதாயத்தினர் அதிகமாக உள்ள பகுதி ஆகும். இந்த 58 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் சுரேஷ் ராணா, அதுல் கர்க், ஸ்ரீகாந்த் சர்மா, சந்தீப் சிங், அனில் சர்மா, கபில் தேவ் அகர்வால், தினேஷ் காதிக், டாக்டர் ஜி.எஸ்.தர்மேஷ் மற்றும் சவுத்ரி லட்சுமி நரேன் ஆகிய 9 அமைச்சர்களும் அடங்குவர்.
முதல்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் ஆளும் பாஜகவுக்கும் சமாஜ்வாதி-ஆர்எல்டி கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. சில தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் செல்வாக்கு உள்ளது. கடந்த தேர்தலில் இந்த 58 தொகுதிகளில் 53-ல் பாஜக வெற்றி பெற்றது.
கரோனா பரவல் காரணமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருந்தது. குறிப்பாக, பொதுக்கூட்டம், சாலைவழி பிரச்சாரம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அரசியல் கட்சியினர் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பி.யில் 2-ம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு வரும் 14-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. உத்தராகண்ட், கோவாவில் ஒரேகட்டமாக 14-ம் தேதி தேர்தல் நடக்கிறது.