நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அம்மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. ஷம்லி, கவுதம புத்தர் நகர் , முசாபர்நகர், மீரட், காஜியாபாத், அலிகார், மதுரா, ஆக்ரா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே, பெண்கள், முதியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றிருக்கிறார்கள். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், இந்த 58 தொகுதிகளில் 53 தொகுதிகளை
பாஜக
கைபற்றியது. சமாஜ்வாதிகட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தலா 2 தொகுதிகளில் வென்றிருந்தன. ஒரு தொகுதியை ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி கைப்பற்றியிருந்தது.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் 412 கம்பெனி மத்திய துணை ராணுவப்படைகளை சேர்ந்த 50 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா காலகட்டம் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தல்
பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை மீண்டும் கைபற்ற சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும், அகிலேஷ் யாதவுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் நான்கு முனைப்போட்டி நிலவினாலும் பாஜக-சமாஜ்வாதி கட்சி இடையேதான் உண்மையான போட்டி என்கிறார்கள்.