கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பகுதியில் 100 நாள் வேலை தொடர்பாக குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞரை ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் தாக்கியதாகவும், தாக்கியவரை விடுத்து தாக்குதலுக்கு உள்ளான இளைஞரையே போலீஸ் கைது செய்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எஸ்.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (34). இவர் அப்பகுதியில் இ.சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று மலையனூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சாலையில் 100 நாள் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று முறைகேடுகள் தொடர்பாக கேள்விகேட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்களுக்கும், ராமருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி, ராமரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அவர் மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்துள்ளார். இதனையடுத்தது கிராம மக்கள் காவல் நிலையத்தில் திரண்டதால் அங்கு சலசலப்பு உருவானது.
சம்பவம் தொடர்பாக ராமரின் மனைவி கீதா பேசியபோது, “மலையனூர் கிராமத்தில் வரத்து வாய்க்கால் பணிக்குத் தான் 100 நாள் வேலைத் திட்டம் செய்யப்பட வேண்டும். அதில் முறைகேடு நடப்பதை அறிந்து அங்கு சென்ற எனது கணவரை, ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். அங்குவந்த போலீஸாரும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஆதரவாக செயல்பட்டு, எனது கணவரை தாக்கியதில் தலை மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.
சிகிச்சை அளிக்க கூட என் கணவரை மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லவில்லை. காவல் நிலையத்தில் அவரைச் சென்று பார்க்கவும் எங்களை அனுமதிக்கவில்லை. புகார் அளித்தாலும் ஏற்கவில்லை. நாங்கள் பட்டியலினத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஊராட்சி மன்றத் தலைவர் உடந்தையோடு, உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி என் கணவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திலும் புகார் அளிக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
கீதாவின் குற்றச்சாட்டு தொடர்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதியிடம் பேசினோம். அதில், “ராமர் நல்ல நிலையில் தான் இருக்கிறார். 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ராமர் ஓடும்போது கீழே விழுந்து உடலில் காயம் ஏற்பட்டதே தவிர, நாங்கள் அவரை அடிக்கவில்லை. இந்த கிராமத்தில் அடிக்கடி பிரச்சனை செய்யக்கூடிய நபர்களில் ராமரும் ஒருவர். 100 நாள் நாள் வேலைசெய்து கொண்டிருந்த பெண்ணிடம் தகராறு செய்ததுடன் அந்த பெண்ணின்மீது தாக்குதலிலும் ஈடுபட்டார் என்ற புகாரின்பேரிலேயே அவர் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளார். காவல் நிலையத்தில் திரண்டிருந்தவர்கள் ராமர்மீது புகார் அளிக்கவந்தவர்கள்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.