உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீராக, கேரளாவாக, மேற்கு வங்கமாக மாறி விடும் என்று அந்த மாநில முதல்வர்
யோகி ஆதித்யநாத்
பேசியது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. சசி தரூரைத் தொடர்ந்து தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனும், யோகிக்கு பதில் கொடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று முதல் சட்டசபைத் தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இன்று 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் ஒரு வீடியோ உரையை வெளியிட்டிருந்தார். அதில் வாக்காளர்கள் தவறு செய்யாமல் வாக்களிக்க வேண்டும். தவறு செய்து விட்டால் உ.பி. ஒரு கேரளாவாக மாறி விடும், காஷ்மீராக மாறி விடும், மேற்கு வங்கமாக மாறி விடும் என்று கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு மேற்குவங்கத்தினர், கேரள மாநிலத்தவர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டிவிட்டர் தளமே ரணகளமாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவரான காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், யோகிக்கு பதிலடி கொடுத்து ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், உ.பி. கேரளாவாக மாறினால் நல்ல கல்வி கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல உத்தரப் பிரதேச மாநிலம் கேரளாவாக மாறினால், அந்த மாநிலத்திற்கு சிறந்த கல்வி கிடைக்கும். சுகாதார சேவைகள் மேம்படும். சமூக நலம் மேம்படும், வாழ்க்கைத் தரம் உயரும், சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவும், ஜாதி, மதத்தின் பெயரால் யாரும் கொலை செய்யப்பட மாட்டார்கள். அதுபோன்றதைத்தான் உ.பி. மக்களும் உண்மையில் விரும்புவார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
யோகி எதையோ பேசப் போக கடைசியில் அது அவருக்கு எதிராகவே திரும்பியிருப்பது பாஜகவினரை அதிர வைத்திருக்கிறது.