உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
மேற்கு உத்தரப் பிரதேசம்
இந்த சட்டமன்ற தேர்தலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. ஏனெனில், இது ஜாட் சமூகத்தினர், விவசாயிகள் நிறைந்து வாழும் பகுதி.
மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேற்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், லக்கிம்பூர் கேரியில் அமைதிவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட லக்கிம்பூர் கேரியும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில்தான் உள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினர் நிறைந்துள்ளனர். இவர்கள் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். விவசாயிகள் போராட்டம் போன்ற காரணங்களால் பாஜகவுக்கு ஜாட் சமூகத்தினரின் ஆதரவு பறிபோகலாம் என்று பேசப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் ஜாட் சமூகத்தினர் பெருமளவில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் மூலம் தெரியவருகிறது. எனினும், ஜாட் சமூகத்தினரில் பலர் அவர்களின் சொந்த கட்சியான ராஷ்ட்ரிய லோக் தள் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
இஸ்லாமியர்களை பொறுத்தவரை பாஜகவை தோற்கடிக்கும் அளவுக்கு பலமாக இருக்கும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக
சமாஜ்வாதி
, ராஷ்ட்ரிய லோக் தள் ஆகிய கட்சிகளுக்கு இஸ்லாமியர்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
தேர்தலில் மாயாவதி ஆர்வம் காட்டாவிட்டாலும் தலித்துகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். எனினும், பகுஜன் சமாஜ் ஆதரவாளர்களில் ஏராளமானோர் இந்தமுறை சமாஜ்வாதிக்கு வாக்களித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் தலித்துகள் 20% இருக்கின்றனர். இடஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சி நடந்து வருவதாக தலித்துகள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது. இதனால், சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அகிலேஷுக்கு ஆதரவாக ஏராளமான தலித்துகள் வாக்களித்துள்ளதாக களத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.