ரவி கலெக்டர் ஆபிஸ் பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் ஒரு வாரம் முன்பு ஷாகுல் வெட்டப்பட்டு துடி துடித்து இறந்த இடத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்தது. `ஒரு வாரத்திக்க முன்ன ஒருத்தனை ஓட ஓட விரட்டிக் கொடூரமா கொன்னுப் போட்ட இடம் மாறியா இருக்கு…?’ ரவியின் மனது நினைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, `இதே மாறித் தான அப்பாவ கொன்னு பொட்ட எடத்துலயும் நடந்திருக்கும்…!’ நினைத்தபடியே கலெக்டர் ஆஃபீஸ் சந்திப்பைச் சுற்றி பார்வையை ஓடவிட்டான். ஒரு வாரத்திற்கு முன்பு இதே நேரத்தில் அந்த இடத்தில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டான் என்பதற்கான எந்தவொரு அடிச்சுவடும் இல்லாமல், அது வழக்கமான பரபரப்போடே இயங்கிக் கொண்டிருந்தது.
என்று நினைத்த ரவியின் மனதின் தத்துவ ஓட்டத்தைத் தடை செய்வதைப் போல, மூளை மூன்று நாள்கள் முன்பு, “இந்த வயசுலயே ஒனக்கு ரௌடிப்பயலுவ சகவாசம் என்னல” என்று விஜயா கத்தியதை அவன் செவிப்பறையில் எதிரொலிக்க விட்டது. `அம்மெக்கி என்ன புத்திகித்தி கெட்டுப் போச்சா…? நான் நாராஜன தவிர வேற யாருகூடயும் பழகுறது இல்லியே. அதுவும் சாயந்த்ரம் ஒரு அரமணிக்கூர் அவங்கூட ஒக்காந்து பேசுறதுல என்ன தப்பு கண்டுபிடிச்சாவ…? ஒருவேள அம்மெ நாராஜன தான் ரௌடின்னு சொல்லிருப்பாவளோ…?!’ கேள்வி கேட்ட ரவியின் மனதிற்கு, அதே மனது, `ச்சே ச்சே நாராஜன் ஒன்னும் ரௌடிப்பய எல்லாம் இல்ல. அப்படியே ரௌடியா இருந்தாலுந்தா என்ன. எண்ட்ட ஒன்னும் ரௌடித்தனத்த காட்டலேல’ சமாதனப் படுத்தும் பதிலையும் கொடுத்தது.
அந்த நேரத்தில் களியக்காவிளை 303 FP பேருந்து ஒன்று அந்த நிறுத்தத்தில் வந்து நிற்கவும், அங்கே பேருந்திற்காகக் காத்திருந்த என்.ஐ இஞ்சினியரிங்க் கல்லூரி மாணவர்கள் கூட்டம் மொத்தமும் அதில் ஏறிக் கொள்ள, நிறுத்தத்தில் கூட்டம் எதுவுமின்றி வெறிச்சோடியது. மீண்டும் ரவி ஷாகுல் வெட்டப்பட்ட இடத்தைப் பார்த்தான். கட்டியிருந்த வேட்டி அவிழ்ந்து விழ அவன் ஓடியது, அவன் பின்னேயே மூன்று பேர் அறுவாளோடு விரட்டியது, துரத்தியதில் ஒருவன் குறி வைத்துக் கனுக்காலில் வெட்டியது, அந்த வெட்டை வாங்கியப் பின்னும் ஓடி ட்ரான்ஸ்ஃபார்மர் அருகிலிருக்கும் சுவர் ஏறிக் கலெக்டர் அலுவலகத்தினுள் குதித்து தப்பிக்க அவன் எடுத்த முயற்சி, அதன் பிறகாக அவனுடைய காலின் ஆடுதசையில் விழுந்த இரண்டாவது வெட்டு, அத்தோடு தளர்ந்து அவன் விழ, மூன்றாவதாக அவன் தோளில் விழுந்த வெட்டு, அடுத்தடுத்து அவன் தரையில் உருளச் சரமாரியாக விழுந்த வெட்டுக்கள் என ஒவ்வொன்றாய் அவன் மனதினுள் காட்சியாய் விரிந்த கணம்,
என்கிற எண்ணமும் அவனுள் தோன்ற, அவனுக்கே அவனை நினைத்து வெட்கமாய் வந்தது.
`இந்தச் சினிமாக்கள்ல தான் ஹீரோவ வெட்ட வந்தா அவென் பறந்து பறந்து சண்டைய போட்டு வெட்ட வந்தவனுவளையே வேட்டுஹது. நிஜத்துல ஓடத்தான் செய்யனுல…! அப்படியே ஓடுனாலும் தொரத்தி வந்து வெட்டத் தான் செய்யுகானுகல்ல’ மீண்டும் அந்த ட்ரான்ஸ்ஃபார்மரைப் பார்த்தான். ட்ரான்ஸ்ஃபாரிமரின் தூணில் சிவப்பாய் ஒரு புள்ளி தெரிவதாய் அவனுக்குத் தோன்றியது. `அன்னிக்கு அந்த அண்ணை ட்ரான்ஸ்ஃபார்மர பிடிச்சாவலா…?’ அவன் மனதிற்குள் மீண்டும் அந்தக் கொலைக் காட்சியை ஓடவிட்டான். அவன் எத்தனை முறை ஓடவிட்டும் அந்த ட்ரான்ஸ்ஃபார்மரில் கொலையுண்டவன் பிடித்ததாய் அவனுக்குத் தெரியவேயில்லை.
மீண்டும் ட்ரான்ஸ்ஃபார்மைரை உற்றுப் பார்த்தான். அங்கே அந்தச் சிவப்பு நிறம் அவன் கண்களுக்குத் தெரியாமல் போக, அவனுடைய் கற்பனைச் சிறகு தன்னை மீட்டெடுத்து விரிந்தது. மூன்றாவது வெட்டை வாங்கியதும் அந்தக் கொலையுண்டவன் ட்ரான்ஸ்ஃபார்மரைப் பிடித்து நிற்க முயன்றதைப் போலவும், ட்ரான்ஸ்ஃபார்மரைப் பிடித்திருந்தக் கையில் நான்காவது வெட்டு விழுந்தததைப் போலவும் அவன் கற்பனை விரிய, அவனுள் ஒரு சந்தோஷத்தின் ஊற்று பெருக்கெடுத்தது. ‘ஆமா ட்ரான்ஸ்ஃபார்மரை பிடிச்சாவ’ நினைத்தபடியே அவன் மீண்டும் அந்த ட்ரான்ஸ்ஃபார்மரைப் பார்க்க அதில் சிவப்பு நிறம் பளீரென்று அவன் பார்வைக்குத் தெரிந்தது.
அவனுள் தோன்றிய கற்பனையால் உண்டான சந்தோஷத்தைத் தக்கவைத்துக் கொள்ள, மீண்டும் அவன் வெட்டியவனின் பார்வையிலிருந்து அந்தக் கொலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
அறுவாளை தூக்கிக் கொண்டு அவன் துரத்த, அவன் முன்னே தன்னால் கொல்லப்பட வேண்டியவன் வேட்டி அவிழ்ந்து விழ ஓடுகிறான். “லேய் அவன் குதிக்கால்ல போடுல” என அவன் கத்த, உடன் வந்த ஒருவன், உயிர் பிழைக்க ஓடுகிறவனின் குதிக்காலைக் குறிவைத்து அறுவாளை வீச, அதுவும் சரியாக அவன் குதிக்காலைக் கிழித்து ஒரு துண்டு சதையை பிய்த்துக் கொண்டு வெளியேற, அவன் கீழே விழுகிறான். மீண்டும் அவன் எழுந்து ட்ரான்ஸ்ஃபார்மரை ஓட்டிய சுவற்றில் ஏறி மறுபக்கம் குதிக்க முயல, இவன் கையிலிருக்கு அறுவாளைக் கொண்டு அவனது ஆடுதசையை வெட்ட, அவன் பிடி சுவற்றிலிருந்து நழுவ, அவன் கீழே வீழாதிருக்கும் பொருட்டு ட்ரான்ஸ்ஃபார்மரைப் பற்றிக் கொள்ள அவனுடைய கையை இவன் வெட்ட, அவன் சரிந்து கீழே விழ, சரமாரியாக இவன் வெட்ட ஆரம்பிக்க,
`அப்பாவ வெட்டினவனுவளையும் இதே மாறி நானும் வெட்டனும்’
தன்னுடையக் கற்பனைக்குச் சம்பந்தமே இல்லாமல் ரவியின் மனதினுள் அசரீரியாய் ஒலித்த ஒரு குரல் அவனைத் திகிலடையச் செய்ய,
“இதப்பாரு மக்கா, நீ வேணா ஆன வேட்டக்கி பிறந்தவனா இருக்கலாம். அதுக்காக எடுத்த எடுப்புல ஆன வேட்டக்கி கிளம்பினன்னு வச்சிக்க, ஆனய இல்ல உங்கால சுத்துற பூனய அதுவுமில்ல உங்காலுக்கு கீழ நெளியிற புழுவ கூட உன்னால வேட்டயாட முடியாது.
இல்லேன்னா ஆனய நீ கொல்லுதுயோ இல்லியோ ஆன உன்ன கொன்னுடும்”
“அப்பாவ கொன்னவனுவள நானும் கொல்லனும்ண்ணே” என்று நாகராஜனிடம் ரவி சொன்னபொழுது, அவன் பீடி ஒன்றைப் புகைத்தபடியே கூறிய வார்த்தைகள் அச்சுப் பிசகாமல் ரவியின் நினைவுகளில் உருண்டோடியது.
மனதினுள் சங்கல்பம் எடுத்துக் கொண்ட ரவியை, கலெக்டர் ஆபீஸ் பஸ் ஸ்டாப்பின் எதிரே இருந்த ராமன் நர்சிங் ஹோமை ஒட்டியிருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்த படி ரம்யாவுக்காகக் காத்திருந்த சதாசிவம் கோபத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, ரவி தன்னை ஒரு வேட்டைக்காரனாய் பாவித்து, தன்னைச் சுற்றி யார் யார் நிற்கிறார்கள், என்னென்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கும் விதமா நிமிர்ந்து உட்கார்ந்தான். என்ன தான் தன்னைச் சுற்றி நடப்பவற்றைத் தான் அவதானிப்பதாக அவன் நினைத்துக் கொண்டாலும், தூரத்தில் தன்னையே கோபமாய் பார்த்தபடி அமர்ந்திருக்கும் சதாசிவத்தை மட்டும் அவனுடைய அவதானிப்பு வட்டம் கருத்தில் கொள்ளவே இல்லை.
**
எஸ்.எல்.பி ஃபுட்பால் மைதானத்திலிருந்து சியிஓ அலுவலகத்திற்கு இறங்கும் படிக்கட்டில் சதாசிவம் கோபமாய் அமர்ந்திருக்க, அவனது பள்ளித் தோழனான கிருஷ்ணக்குமார் அவனிடம் வந்தான்.
“லேய் மாப்ள நானும் காலைல இருந்தே உன்ன கவனிச்சிட்டு இருக்கேன். ஒரு மாதிரி உர்ருன்னே உக்காந்திருக்க. என்னல பிரச்சன”
“உன்கிட்ட ஒரு இருவது பைசா இருக்கா”
“யேம்ல, இந்த இருவது பைசாக்கு தான் இப்படி உர்ருன்னு உக்காந்திருந்தியாக்கும்”
“அடிச்சு பல்லகில்ல ஒடச்சிருவேன் பாத்துக்க. உன்கிட்ட இருக்கா இல்லியா” சட்டெனச் சதாசிவம் கோபத்தில் கத்த, கிருஷ்ணகுமார் சற்றுப் பின்வாங்கினான்.
“இருக்கு மாப்ள.”
சதாசிவம் தன்னுடைய பேன்ட்ஸ் பாக்கெட்டிலிருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தை எடுத்து அவனிடம் கொடுத்து, “புல்லட்ட எடுத்துக்கோ, கீழ டக்லஸ் கடைக்குப் போயி ஒரு வில்ஸை வாங்கிட்டு வா” என்று சொல்லவும், சரியென்று கிருஷ்ணகுமார் புல்லட்டில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்ய, “மறந்துறாம ரெண்டு குச்சியையும் எடுத்துட்டு வந்துடு” என்றான் சதாசிவம்.
சிகரெட்டை உதட்டில் பொருத்திக் கொண்டு, தீக்குச்சியை அந்தப் படிக்கட்டின் கைப்பிடி சிமெண்ட்டில் உரசி தீயை வரவழைத்துச் சிகரெட்டைப் பற்ற வைத்தான் சதாசிவம்.
“மாப்ள உன்னோட இந்த ஸ்டைலு தான் மாப்ள இங்க படிக்கிற எல்லா குட்டியளையும் வளச்சி போட்டு வச்சிருக்கு” கிருஷ்ணகுமார் பெருமையாகச் சொல்ல, அவனை முறைத்தான் சதாசிவம்.
“உண்மைய தானமாப்ளேய் சொல்லுகேன்”
“மயிரு உண்ம. என் தராதரத்துலருந்து எறங்கிப் போயி அந்தப் பொடிப்பய கிட்ட பேசிட்டு வந்திருக்கேன். இன்னைக்கு பாத்தா கலெக்டராஃபிஸ் ஸ்டாப்ல உக்காந்திருக்கான்”
“யாரு அந்த ரெவிப்பயலா”
“ஆமா அந்த மயிராண்டி தான்”
“அந்தப் பொடிப்பயல எல்லாம் கணக்குலயே எடுத்துக்காத மாப்ள”
“அதெப்டில எடுத்துக்காம இருக்க முடியும்…? அவென் வெற எவ பின்னாடி சுத்தினாலுங்கூட எனக்குக் கவல கெடயாது. அவென் சுத்துகது ரெம்யாக்க பின்னாடியாக்கும்”
“கடுப்பு மயிரெ கெளப்பாத சொல்ட்டேன்.” எரிச்சலோடு சதாசிவம் சொல்ல, கிருஷ்ணக்குமார் அமைதியானான்.
“இன்னைக்கு பஸ் ஸ்டாப்ல உக்காந்துட்டு அப்படியே செறஞ்சி பாக்கான். அன்னைக்கு அவெங்கிட்ட போய் ஒடக்கிட்டு வந்திருக்க கூடாது. நாலு போடு போட்டுட்டு வந்திருக்கனும்.”
“இப்பவும் எதுக்கு மாப்ள வெயிட் பண்ணிட்டு இருக்க, நாலு கொட்டு கொட்டிர வேண்டீது தான”
“இல்ல மாப்ள இனி முடியாது. புத்தேரி நாராஜன தெரியும்ல. அவெனே நேரடியா என்கிட்ட வந்து பேசிட்டு போயிட்டான். இனி நான் இந்தப் பொடிப்பய மேல நான் கைய்ய வச்சென்னாக்க அவென் எறங்குவான்”
“புத்தேரி நாராஜனா” எனக் கேட்டுவிட்டு கிருஷ்ணக்குமார் சத்தமாகச் சிரிக்க, ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்தான் சதாசிவம்.
“இப்ப தான் ரெண்டு மூணு நாளெக்கு முன்னால, பொத்தயடி பக்கத்துல ஒருத்தி கழுத்துல கெடந்த செயின அறுக்கப் பாத்திருக்கான். ஊருக்காரனவ கிட்ட மாட்டித் தொவ தொவன்னு தொவச்சி எடுத்துட்டானுவ. வாங்குன அடிக்கி இன்னும் ஒரு ரெண்டு மாசத்திக்கி அவென் வெளிய வரவே மாட்டான்” சொல்லிவிட்டு மீண்டும் கிருஷ்ணகுமார் சிரித்தான்.
சதாசிவம் ஆலோசனையோடு, “நீ சொல்றது எல்லாஞ்செரி தான் மாப்ள. ஆனா ரெண்டு மாசத்திக்கி அப்புறமா அவென் வெளிய வரத்தான செய்வான்.”
ஆமாம் என்பதாய் சதாசிவம் தலையை ஆட்டினான்.
சதாசிவத்தின் கையில் இருந்த சிகரெட்டை வாங்கி தன்னுடைய உதட்டில் வைத்துக் கொண்ட கிருஷ்ணக்குமார், “நீ கைவச்சா தான மாப்ள பிரச்னை. நான் வச்சா ஒண்ணும் ஆகப்போறது இல்லேல. நாளைக்கு அந்தப் பயல நான் தட்டுறேன். நீ தூரமா நின்னு வேடிக்கை மட்டும் பாரு மாப்ள” சொல்லிவிட்டு சிகரெட்டை அவன் சுண்டி எறிய, சதாசிவம் முகத்தில் கோபம் மறைந்து புன்னகைத் தோன்றியது.
ரவியின் வாழ்க்கையை மாற்றப் போகும் முதல் அடியைத் தாங்கள் தான் எடுத்து வைக்கிறோம் என்பதை அறியாமலேயே அவர்கள் இருவரும் அங்கிருந்துக் கிளம்பினார்கள்.
(தொடரும்)