உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர். திரைப்படம் தமிழகத்தில் நாளை திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில், இந்த திரைப்படத்தை உடனடியாக தடை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தடா ரஹீம், “எப்.ஐ.ஆர் திரைப்பட ட்ரெய்லரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள்போல் சித்தரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், இத்திரைப்படத்தை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். ஏற்கெனவே, எப்.ஐ.ஆர். திரைப்படம் மலேசியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதால், அந்த சமூக இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஏற்கெனவே, துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியான காட்சிகள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் படத்தை எடுக்கக்கூடாது என நீதிமன்றம் எச்சரித்திருந்தது. எப்.ஐ.ஆர் படத்தை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப் போகிறேன்” என்றார்.