தஞ்சாவூர்: “பாசிச பாஜக, அடிமை அதிமுகவுக்கு எதிராக சிம்மசொப்பனமாக திமுக திகழ்கிறது” என்று தஞ்சாவூரில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சாவூர் கல்லுக்குளத்தில் இன்று காலை தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பேசியது: ”திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், முக்கியமான வாக்குறுதிகளான கரோனா கால நிவாரணம் ரூ. 4 ஆயிரம், அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் கட்டணக் குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு வாக்குறுதிகள் அடுத்தடுத்த நாள்களில் நிறைவேற்றப்பட உள்ளன.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ‘தமிழகத்தை பாஜகவால் ஆள முடியாது’ என்றார். அந்தளவுக்கு அனைவரது நம்பிக்கையையும் பெற்றுள்ளோம்.
தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு, அதற்கு பின் உதயநிதியை காணவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நான் ஒவ்வொரு இடமாகச் சென்று வருகிறேன். மக்களைச் சந்தித்து வருகிறேன். நேற்று கரூர், பின்னர் திருச்சி, இன்று தஞ்சை என மக்களைச் சந்தித்து வருகிறேன். அதிமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். பாசிச பாஜக, அடிமை அதிமுகவுக்கு எதிராக சிம்மசொப்பனமாக திமுக திகழ்கிறது” என்று பேசினார்.
இரு பெண்கள் குறுக்கிட்டு கோரிக்கை: உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தங்கம் என்ற பெண், தன்னுடைய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், அதைத் தள்ளுபடி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தார். அதற்கு “மனுவாக எழுதி தருமாறும், அதை வைத்து தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கையில், குறிக்கிட்ட மற்றொரு பெண்ணான வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த கவிதா, நானும் திருக்குவளையைச் சேர்ந்தவள்தான் என்றும், மூன்று பிள்ளைகளை வைத்து சிரமப்படுவதாகவும், நிதி உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். ”ஒரு மனுவாக எழுதி கொடுத்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்து, பெண்களின் கேள்விகளை எதிர்கொண்டு பதிலளித்தார்.