`ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்தில் பிறந்தார் முகேஷ். ஆனால், முதலீட்டின் மூலம் ஒரே நாளில் அனைத்துக் கடன்களையும் அடைத்து, சொந்தமாக வீடு வாங்கி, சில மாதங்களிலே பில்லியனாகிவிட்டார்…’
– இணையதளங்களில் பரவிவரும் சில மோட்டிவேஷன் கதைகள் இப்படித்தான் ஆரம்பித்திருக்கும். கேட்பதற்கே மிக சுவாரஸ்யமாக இருக்கிறதே என அந்தக் கட்டுரையை க்ளிக் செய்து உள்ளே சென்று படித்துப் பார்த்தால்தான் தெரியும் இறுதியில் அது ஓர் ஏமாற்று வேலை என்பது.
அப்படித்தான் சமீபத்தில் ஒரு செய்தி… “28 வயதில் பில்லியனரான ஆண் என அந்தக் கட்டுரைக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. அவர் எப்படித்தான் இளம் வயதில் பில்லியனர் ஆனார் என்ற செய்தியைப் படிக்க ஆர்வம் தூண்டவே உள்ளே சென்று படித்துப் பார்த்தால், கதை நம்மை வியக்க வைக்கும்.
படிப்பதற்குக்கூட பணம் இல்லாத நிலையில், படிப்பு செலவுக்காக பீட்சா விற்கும் உணவகத்தில் வேலைக்குச் சேர்கிறார். ஒரு பீட்சா டெலிவரிக்காகச் செல்லும்போது உள்ளே இருப்பவர்கள் பத்து நிமிடத்துக்கு முன்னாள் 2,00,000 வரை ஒரு வலைதளத்தில் சம்பாதித்தது குறித்துப் பேசிக்கொண்டதைக் கேட்கிறார். லேப்டாப்பில் உள்ள வலைதளத்தைப் பார்க்கிறார். வீட்டில் சென்று அவருக்கான அக்கௌன்ட்டை உருவாக்கி, கையிலிருந்த பணத்தை முதலீடு செய்கிறார். அடுத்த நாள் காலையிலேயே அவருக்கு 30,000 ரூபாய்க்கும் அதிகமான பணம் அவருடைய வங்கிக் கணக்கில் இருப்பது தெரிகிறது. தொடர்ந்து அதில் முதலீடு செய்து கடனை அடைகிறார். வீடு வாங்குகிறார்; சில மாதங்களிலே பில்லியனராகிறார்.
– இதோடு மட்டும் அந்தச் செய்தி நின்றுவிடாமல் சில இணையதளப் பக்கத்தைக் குறிப்பிட்டு இதில் முதலீடு செய்து நீங்களும் பயனடையுங்கள் என்று இருந்தது. அந்த வலைதள பக்கமும் போலியானதாக இருந்தது.
ஓவர் நைட்டில் பில்லியனர், ஒரே நாளில் ஒரு கோடி எனப் பல பொய்யான கதைகள் மக்களை அந்தத் தளத்துக்கு வரவழைப்பதற்காக உருவாக்கப்படுகின்றன. மக்களிடையே இப்படி பொய்யான தகவல்கள் பகிரப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என நிதி ஆலோசகரான பி.பத்மநாபனிடம் பேசினோம்.
“டெக்னாலஜி வேகமாக வளர்ந்து வருவதால், நாம் எளிதில் பணக்காரர் ஆவதற்கு சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன. தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆனவர்களைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்கு மிகச் சரியான சமீபத்திய உதாரணங்களாக யூடியூபர்களைச் சொல்லலாம்.
தொழில்நுட்ப வசதிகள் பெருகி வருவதால், முன்பிருந்த கால கட்டத்தைப் போல் பணம் ஈட்ட அதிக நேரம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இன்று இல்லை. ஆனால், என்ன தொழில் செய்கிறார்கள், எதில் முதலீடு செய்கிறார்கள் என்பதை அறிவது அவசியம். ஏனெனில், அந்தத் தொழிலில் கடைசி வரை ஒருவரால் சம்பாதிக்க முடியுமா போன்ற பல கேள்விகள் உண்டு.
அதுமட்டும் இல்லாமல், திடீரென ஒருவர் 10 கோடி, 20 கோடி ரூபாய் சம்பாதித்தாகச் சொன்னால் நம்பக்கூடியதாக இல்லை. ஒருவர் கோடி ரூபாய் பெறுகிறார் எனில், அதற்காக குறைந்தபட்சம் முதலீட்டு தொகையாக ஒரு லட்சம் அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை போட்டு இருந்தால்தான் ஒரு கோடி வரை சம்பாதிக்க முடியும். குறைந்த அளவு பணத்தைப் போட்டு ஒரு லட்சம் ஒரு கோடி சம்பாதித்தேன் என்று சொல்வதெல்லாம் நடக்காத காரியம்.
இது போன்ற தகவல்கள் நம்முடைய வாட்ஸ் அப்பில்கூட வரும்; அது எதையும் ஆராய்ந்துகூட பார்க்காமல் மற்றவர்களுக்குப் பகிர்ந்து வருகிறோம். ஒரு தகவல் வந்தால் அது உண்மையா பொய்யான என முதலில் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு இருக்கக்கூடிய காலகட்டத்தில் பணத்தை இருமடங்காக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆனால், இந்த வலைதளத்தில் முதலீடு செய்யுங்கள், அதில் முதலீடு செய்யுங்கள் என யாராவது பரிந்துரை செய்தால் அதைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். நிச்சயமாக அது பணம் பறிக்கும் நோக்கமாக இருக்கும்.
ஒருவேளை, இப்படி தவறான செய்திகள் வந்தால் நமக்கென உள்ள பகுத்தறிவை உபயோகிக்க வேண்டும். சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்கு முன்பெல்லாம் 6 மணி நேரம் ஆகும். தற்போது டெக்னாலஜி முன்னேற்றத்தால் 5 மணி நேரத்திலேயே சென்றுவிடலாம். விமானத்தில் அரை மணி நேரத்திலே சென்றுவிடலாம். இதுவே 10 நிமிடத்தில் ஒருவர் சென்றுவிட்டேன் எனச் சொன்னால் நம்பும்படியாக இருக்கிறதா?அது போலத்தான் பணம் ஈட்டுவது சுலபம். ஆனால், அதற்கான நேரமும் முதலீடும் முக்கியம்.
உடனடியாகப் பணக்காரர்கள் ஆக வேண்டும் என மக்களின் பேராசையும் இது மாதிரியான விளம்பரங்கள் அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம். பேராசையால் ஏமாறுபவர்கள் நிறைய பேர் இருப்பது போல, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால், இதுபோன்ற விளம்பரங்களை நம்பி காசைக் கரியாக்குவதை விட்டுவிட்டு, நல்ல லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்” என்றார் தெளிவாக.
மக்கள் இதுமாதிரியான போலி விளம்பரங்களில் இருந்து விலகி இருப்பதுதான் நல்லது!